சென்னை: ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ (Pradhan Mantri Awas Yojana) எனப்படும் பிரதமரின் ஏழைகளுக்கான வீடு வழங்கும் திட்டம் மத்திய அரசு மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் வீடு கட்ட நினைக்கும் ஒவ்வொருவருக்கும் உதவும் வகையில் ரூ.2,77,290 ரொக்கம், பொருள் மற்றும் மனித வளமாக அரசின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக 62% மாநில அரசின் மூலமாகவும், 38 சதவீதம் மத்திய அரசு மூலமாகவும் நிதி ஒதுக்கப்படுகிறது. இதில் தமிழகம் முழுவதும் ஏழைகளுக்கு சேர வேண்டிய பல கோடி பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கண்டறிந்துள்ளனர்.
கடந்த 2016 முதல் 2020-ஆம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சி காலகட்டத்தில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அதிகாரிகள் 50 போ் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். குறிப்பாக தமிழகம் முழுவதும் கிடைக்க பெற்ற புகார் மற்றும் விசாரணை அடிப்படையில் 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தொடர் புகார்: கடந்த மே 20-ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஊராட்சியில் உள்ள சணபத்தூா் கிராமத்தில் வீடுகளைக் கட்டாத பயனாளிகளுக்கு விதிகளை மீறி ரூ.31.66 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது கண்டறியப்பட்டது.
மேலும் ஏற்கனவே சொந்த வீடுகள் உள்ள மக்கள் மற்றும் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறத் தகுதி இல்லாத பலரும் லட்சக்கணக்கான ரூபாயை மோசடியாகப் பெற்றுள்ளதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவ்வாறாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில், கடந்த மார்ச் மாதம் நாகப்பட்டினத்தில் 146 பயனாளிகளுக்கு வழங்க வேண்டிய நிதியில் ரூ.1 கோடி அளவுக்கு முறைகேடு செய்ததாக 10 அதிகாரிகள் மீது பதிவு செய்யப்பட்டது.
2 கோடி மோசடி: இது தமிழகத்தில் மிகப்பெரிய முறைகேடு வழக்காக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதே போன்று பல மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் நடந்த ஊழல் தொகை குறித்து தற்போது வரை கணக்கிட்டுப் பார்த்ததில் ரூ.2 கோடி வரை மோசடி நடந்து இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த மோசடியில் சிக்கிய அதிகாரிகளில் பெரும்பாலானோர் பஞ்சாயத்து செயலாளர்கள், தொகுதி மேம்பாட்டு அதிகாரிகள், ஊராட்சி மன்றத் தலைவா்கள் பயனாளிகளாக முன்பதிவு செய்து பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் நிதியைத் தவறாகப் பெற்றது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறும் மக்கள் தரும் ஆவணங்களையும், வீடு கட்டும் இடத்தையும் நேரில் சென்று அதிகாரிகள் ஆய்வு செய்து அவர்களுக்கு நிதி ஒதுக்கப்பட வேண்டும். குறிப்பாக பயன்பெறும் மக்கள் வீடு கட்டும் பொழுது பல்வேறு கட்டத்தில் பணம் என்பது அதிகாரிகள் மூலம் அளிக்கப்படும்.
இதனை உறுதி செய்வதற்காகத் தனியாக செல்போன் செயலிகள் உருவாக்கப்பட்டுள்ளது. பல்வேறு கட்டங்களாக நடக்கும் கட்டுமான பணியைப் புகைப்படம் எடுத்து இந்த செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆனால் இந்த திட்டத்தில் பயன்படுத்தப்படும்,
ஆவாஸ் மென்பொருள் செயலியைத் தவறாகப் பயன்படுத்தி அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பாக தகுதியற்ற நபர்களுக்கு போலி ஆவணங்கள் மூலம் நிதி அளிக்கப்பட்டு, வீட்டைக் கட்டியது போல் கட்டுமானங்கள் புகைப்படம் எடுத்து மோசடியாக செயலியில் பதிவேற்றம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் இந்த திட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட நிதியானது, எந்த வங்கிக் கணக்குகளுக்கு செல்கிறது என லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஆய்வு செய்தபோது தகுதி இல்லாத நபர்களுக்கும், மேலும் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் தொடர்பான நபர்களின் வங்கி கணக்கில் சென்றது ஆதாரங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்த மோசடியில் தொடர்பான புகார்களையும் கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையாக வைத்து முதற்கட்ட விசாரணை விரிவாக நடத்தியதால் அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தாமதமாக வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மொகா ஊழல்: தொடர்ந்து பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் நடந்த மெகா ஊழலில் இன்னும் எத்தனை அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளது. அப்போதைய அதிமுக ஆட்சி காலகட்டத்தில் எந்தெந்த அரசியல் பிரமுகர்களுக்கு தொடர்பு உள்ளது என பல்வேறு கோணத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் வழக்குப் பதிவு செய்யப்பட்ட 50 அதிகாரிகள் ஒவ்வொருவருக்கும் சம்மன் அனுப்பி விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது அடுத்தடுத்து ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை என்பது நடைபெற்று வருகிறது.
அதன் தொடர்ச்சியாக தி. நகர் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சத்யா சென்னை மாநகராட்சி அதிகாரிகள் உதவியோடு, அதிமுக ஆட்சிக் காலத்தில் கட்டப்படாத கட்டிடங்களுக்குத் தொகுதி மேம்பாட்டு நிதியை செலவழித்ததாக முறைகேட்டில் ஈடுபட்டது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த நிலையில் அதிமுக ஆட்சிக் காலத்தில் பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் ஏழை மக்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை கோடிக்கணக்கில் அதிகாரிகள் மோசடி செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: சிகிச்சைக்காக வந்தவரை அடித்துக் கொன்ற மருத்துவமனை நிர்வாகத்தினர்? கோவையில் நடந்தது என்ன?