சென்னை: பசங்களுக்கு பெரும்பாலும் பைக், கார் என்றாலே தனி எமோஷன் தான். பைக் அல்லது கார் நம்ம கையில் கிடைத்தாலே ரேஸிங் விடுவதுண்டு. சின்ன வயதில் ரிமோட் கன்ட்ரோல் காரில் ரேஸிங் விட்டதுபோல. அதுமட்டுமின்றி நாம் சிறுவயதாக இருக்கும்போது நிஜத்தில் நடக்கும் பைக் அல்லது கார் ரேஸினை டிவி சேனல்களிலேயே பார்த்ததுண்டு. அதனை நேரில் காண நமக்குஎப்போதும் ஆசை இருக்கும். நேரில் பார்ப்பதற்கான வாய்ப்பு தற்போது கிடைத்துள்ளது.
சென்னையில் ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 1 ஆம் தேதி வரை இந்திய ரேஸிங் விழா நடைபெற இருக்கிறது. இந்திய ரேஸிங் விழா என்பது (IRF) என்பது இந்தியாவில் வளர்ந்துவரும் மோட்டார் ஸ்போர்ட்ஸ் ரசிகர்களை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்ட நிகழ்வாகும். இந்தியன் ரேஸிங் லீக் (IRL) மற்றும் ஃபார்முலா 4 இந்தியன் சாம்பியன்ஷிப் ஆகியவை இந்த போட்டியின் பிரிவுகளாகும்.
ஏற்கெனவே, கார் ரேஸ் நடத்துவதற்கு கடந்த வருடம் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் மிக்ஜாம் புயலின் காரணமாக நிறுத்தப்பட்டது. தற்போது அடுத்த மாதம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. RPPL மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துடன் இணைந்து இந்த பந்தயத்தை நடத்துகிறது.
இதுகுறித்த அறிவிப்பு இன்று (ஜூலை 29) தனியார் ஹோட்டலில் நடைபெற்ற தொடக்க விழாவில் வெளியிடப்பட்டது. இந்த விழாவில் RPPL நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் அகிலேஷ் ரெட்டி, கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்யா மிஸ்ரா IAS , தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தலைமை அதிகாரி மேகநாத ரெட்டி IAS ஆகியோர் கலந்து கொண்டு இதன் அறிவிப்புகளை வெளியிட்டனர்.
அதில், 3.5 கிலோ மீட்டர் அளவில் இந்த போட்டி நடைபெற இருக்கின்றது. தீவுத்திடல் மைதானத்தில் தொடங்கி மீண்டும் தீவுத்திடலிலே முடிவடைகிறது. பந்தயம் நடைபெறும் பாதையில் 19 திருப்பங்கள், பல இரட்டை வளைவுகள் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
போட்டியின் சிறப்பு என்ன?: இதுகுறித்து ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு பிரத்யேகமாக பேசிய RPPL நிறுவனத்தின் தலைவர், "இந்த போட்டியினை 2 பிரிவுகளில் நடத்த இருக்கிறோம். ஒன்று பார்முலா 4 ரேஸ் மற்றும் மற்றொன்று இந்தியன் ரேஸிங் லீக். இது உலகின் முதல் பாலின நடுநிலையான போட்டி. இந்த பந்தயத்தில் பெண்களும், ஆண்களும் போட்டியிட இருக்கின்றனர்.
இப்போட்டியை ஆகஸ்ட் 30 தேதி நடத்த இருக்கிறோம். இதற்கான வேலைகளை ஆகஸ்ட் 24 ஆம் தேதியே தொடங்க இருக்கிறோம். சென்னையில் ஏராளமான கார் உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் நிறைய பார்முலா 1 ரேஸ் வீரர்கள் உள்ளனர். இந்த போட்டியானது தமிழக மக்களுக்கு உற்சாகத்தை அளிக்கும் விதமாக இருக்கும்" என்று அகிலேஷ் ரெட்டி தெரிவித்தார்.
விளையாட்டு மேம்பாட்டு நிறுவன தலைமை அதிகாரி தெரிவித்ததாவது, "தமிழ்நாட்டில் எப்போதுமே விளையாட்டு போட்டிகள் மிகவும் ஈடுபாட்டுடனும், சிறப்பாகவும் நடைபெறும். குறிப்பாக செஸ் ஒலிம்பியாட், ஹாக்கி போட்டி போன்றவற்றை நாம் எவ்வளவு பிரம்மாண்டமாக செய்தோம் என்பது அனைவருக்கும் தெரியும்.
அதேபோல தான் இந்த போட்டியும் நாம் பார்க்கிறோம். அதுமட்டுமின்றி இது ஒரு சர்வதேச அளவிலான விளையாட்டு. எனவே, இது நமது தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கும். இந்த பந்தயத்தை கண்டிப்பாக நல்லபடியாக நடத்துவோம் என்று நம்புகிறோம்.
நாங்கள் இந்த பந்தயம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளான காவல்துறை, மாநகராட்சி, ராணுவம், கப்பற்படை ஆகியோருடன் கூட்டம் நடத்தினோம். அவர்களின் உதவியோடு ஆகஸ்ட் 28 தேதிக்குள் அனைத்து ஏற்பாடுகளையும் முடித்து விடுவோம்.
இந்த போட்டிக்கு அரசு சார்பில் எந்தவிதமான பண உதவிகளும் கொடுக்கப்போவது இல்லை. கார் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்களே ஸ்பான்ஸர் செய்கின்றன. பாதுகாப்பு வசதிகள் அனைத்தும் சிறப்பாக திட்டமிட்டுள்ளோம் இதில் எந்த பாதிப்பும் ஏற்படாது" என்று மேகநாத ரெட்டி கூறினார்.
இதையும் படிங்க: "தமிழகம் கொலை மாநிலம் அல்ல; கலை மாநிலம்" - ஈபிஎஸுக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி! - Minister Regupathy about eps