கரூர்: கரூரில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி செயல்வீரர்கள் கூட்டம் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணி அளவில், கரூர் - கோவை சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், கரூர் மக்களவைத் தொகுதியின் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர் வி.வி.செந்தில்நாதன், பாட்டாளி மக்கள் கட்சியின் கரூர் மாவட்ட செயலாளர் புகலூர் சுரேஷ் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார். பின்னர், கோவை சாலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் பணிமனையை திறந்து வைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "கரூர் மக்களவையைப் பொருத்தவரை, வேலை செய்யக்கூடிய பிரதிநிதிகள் இங்கு கிடைக்கவில்லை. கரூர் திமுக மாவட்ட அமைச்சர் ஜெயிலில் உள்ளார்.
கரூர் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான ஜோதிமணி, வேடந்தாங்கல் பறவையைப் போல அவ்வப்போது தொகுதி பக்கம் வந்து எட்டிப்பார்த்துவிட்டு செல்கிறார். கரூர் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் செந்தில்நாதன், ஏற்கனவே இரண்டு முறை அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர். ஆனால், தொடர்ந்து மக்கள் பணி செய்து வருவதால், அவரை வேட்பாளராக பாஜக அறிவித்துள்ளது.
2019 தேர்தலில் பாஜக அளித்த தேர்தல் வாக்குறுதி 295-யும் முழுவதுமாக நிறைவேற்றி உள்ளது. ஆனால், திமுக அறிவித்து இருந்த 521 தேர்தல் வாக்குறுதியில் 20 வாக்குறுதிகள் கூட நிறைவேற்றப்படவில்லை. ஆனால் முதலமைச்சர், 99 சதவிகித வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாகக் கூறுகிறார். அப்படி நிறைவேற்றியதாக முதலமைச்சர் கூறினால், வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா?" என கேள்வி எழுப்பினார்.
கரூர் தொகுதி என்பது இனி மோடிக்கும், மக்களுக்கும் இடையே ஒரு பாலமாக இருக்கும். கண்டிப்பாக தமிழகத்திற்கு மீண்டும் மோடி வருவார். ஏப்ரல் 2ஆம் தேதிக்கு பிறகு தேதி கூறப்படும். எங்கு வருகிறார் என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.
கரூர் மாவட்டத்தில் உள்ள கிராமப்புறங்களில், மிகப்பெரிய பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து, அதில் பிரதமர் மோடி அல்லது உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகிய இருவரில் ஒருவரை அழைத்து வர வேண்டும் என மிகவும் ஆவலாக உள்ளோம். அதற்கான முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு உள்ளது" எனக் கூறினார்.
இதையும் படிங்க: ரூ.582.95 கோடி வைத்துள்ள ஆற்றல் அசோக்குமார்.. ஈரோடு திமுக வேட்பாளரின் சொத்து மதிப்பு எவ்வளவு?