தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் காவல் நிலையத்திலிருந்து கடந்த 2021ஆம் ஆண்டு சோழபுரம் காவல் நிலையம் தனியாக உருவாக்கப்பட்டது. இந்த காவல் நிலையம் தற்காலிகமாகச் சோழபுரம் பேரூராட்சி சமுதாயக் கூடத்தில் செயல்பட்டு வருகிறது.
சோழபுரம் உள்ளிட்ட 47 கிராமங்களை எல்லையாகக் கொண்டது இந்த காவல்நிலையத்திற்கு சொந்தமாகக் கட்டிடம் இல்லாதது போலீசார் இடையேயும், பொதுமக்கள் இடையேயும் ஒரு பெரும் குறையாக இருந்து வந்தது. இதனையடுத்து காவல்நிலையம் அமைப்பதற்கான இடத்தை அதிகாரிகள் தேடி வந்தனர்.
இந்நிலையில் சோழபுரத்தைப் பூர்வீகமாகக் கொண்டவரும் தற்போது கும்பகோணம் காந்தி நகரைச் சேர்ந்த தொழிலதிபருமான ஏ.ஜே.ஷாஜகான் என்பவர் தாமாக முன்வந்து 20 ஆயிரம் சதுர அடி கொண்ட நிலத்தைக் காவல்நிலையம் அமைப்பதற்குத் தானமாக வழங்கியுள்ளார். இதன் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் 2 கோடியாகும்.
இதனையடுத்து சோழபுரம் பேரூராட்சி உட்பட்ட புல எண் 192/4ல் உள்ள 20,056 சதுர அடி உள்ள நிலத்தை நேற்று முந்தினம், பத்திரப்பதிவு செய்து அதனை திருவிடைமருதூர் துணை காவல் கண்காணிப்பாளர் ஜி.கே.ராஜூ, திருப்பனந்தாள் காவல் ஆய்வாளர் கரிகாலச்சோழன் ஆகியோரிடம் வழங்கினார் தொழிலதிபர் ஏ.ஜே. ஷாஜகான்.
தொடர்ந்து திருவிடைமருதூர் டிஎஸ்பி மற்றும் காவல் துறையினர், ஷாஜகானுக்கு பொன்னாடை போர்த்தி நன்றி தெரிவித்தனர். மேலும் "இந்நாள் உங்களுடைய வாழ்கையில் மறக்கமுடியாத நாளாக இருக்கட்டும் சார்" என தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர். 2 கோடி மதிப்பிலான நிலத்தைத் தானமாகக் கொடுத்த ஷாஜகானுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஷாஜகான் ஈடிவி பாரத்திடம் கூறுகையில், "சோழபுரத்தில் காவல் நிலையம் கட்ட ஒரு இடம் வேண்டும். தெரிந்த இடம் இருந்தால் சொல்லுங்கள் என்று என்னிடம் அதிகாரிகள் கேட்டனர். அப்போது என்னிடம் ஒரு நிலம் இருக்கிறது. அதை வேண்டுமானால் முழுவதுமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று கூறினேன்.
அதைக் கேட்டு அவர்கள் சந்தோஷமாகி விட்டனர். இப்போது அந்த நிலத்துக்கான பத்திரத்தை அவர்களிடம் ஒப்படைத்துள்ளேன். எனக்குச் சொந்தமான 20 ஆயிரம் சதுர அடி நிலத்தைத் தமிழ்நாடு காவல்துறைக்குத் தானமாக வழங்கி உள்ளேன். இந்த இடம் இனி காவல்துறைக்குச் சொந்தமானது. என்னுடைய சோழபுரத்துக்கு மக்களுக்காக இந்த நிலத்தை வழங்கி உள்ளேன். மனமகிழ்ச்சியோடு இந்த நிலத்தைக் கொடுத்துள்ளோம். என்னுடைய 45ஆவது திருமண நாளில் இது போன்றதொரு நிகழ்வு நடந்தது எனக்கு மிகுந்த மனமகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: அசல் பட்டா எங்கள் கையில்.. நிலம் அவர்கள் கையில்.. என்ன அநியாயம்! - குமுறும் மாற்றுத்திறனாளிகள்!