சென்னை: ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாளன்று விநாயகரின் பிறந்தநாளாக இந்து மதத்தினர் கொண்டாடும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை, இந்துக்களின் முக்கியமான விழாக்களுள் ஒன்றாகும். அந்தவகையில் இந்த ஆண்டு, கடந்த 7ஆம் தேதி சனிக்கிழமை அன்று விநாயகர் சதுர்த்தி பண்டிகை இந்தியா முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
அதில் ஒருபகுதியாக சென்னை ஆர்.கே.நகரில் இந்து முன்னணி சார்பில் சாலைகளிலும் குடியிருப்பு பகுதிகளிலும் 113 விநாயகர் சிலைகள் வைத்து தினமும் பூஜைகள் செய்து வழிபட்டு வந்தனர். அதிலும் குறிப்பாக, தண்டையார்பேட்டை நாவலர் குடியிருப்பு பகுதியில் இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்டு இருந்தது செல்வ விநாயகர் சிலைக்கு தினமும் பூஜைகள் செய்து வழிபட்டு வந்தனர்.
மேலும், தண்டையார்பேட்டை பர்மா முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியான நேதாஜி நகர்ப் பகுதியில் கடந்த 2012ஆம் ஆண்டு விநாயகர் சிலை ஊர்வலத்தில் கலவரங்கள் ஏற்பட்டதை அடுத்து ஒவ்வொரு ஆண்டும் போலீசார் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் சென்று காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் கரைக்கப்படுவது வழக்கமாக உள்ளது.
இதையும் படிங்க: சேலம் ராமர் பாதம் கோயில் விவகாரம்; ஜேசிபியை சிறைபிடித்த கிராமத்தினர்!
அந்தவகையில், இந்த ஆண்டு எவ்வித கலவரங்களும் பிரச்சனைகளும் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சக்திவேல் தலைமையில் ஆர்.கே.நகரில் சுமார் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டனர்.
இதனை அடுத்து, தண்டையார்பேட்டை நாவலர் குடியிருப்பு பகுதியில் இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைக்கு பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்டவற்றைக் கொண்டு அபிஷேகம் செய்து வழிபாடு செய்யப்பட்டது.
மேலும், பர்மா இஸ்லாமிய ஜமாத்தைச் சேர்ந்த முஸ்லிம் நிர்வாகிகள் இந்த பூஜையில் கலந்துகொண்டு விநாயகருக்கு தேங்காய் உடைத்து வழிபாடு செய்தனர். இதன் தொடர்ச்சியாக, இஸ்லாமியர்கள் முன்னே செல்ல விநாயகர் ஊர்வலம் வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சக்திவேல் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது.
இதுமட்டும் அல்லாது, நேதாஜி நகர்ப் பகுதியில் ஆங்காங்கே வைக்கப்பட்டிருக்கும் விநாயகர் சிலைகளுக்கு இஸ்லாமியர்கள் வழிபாட்டுடன் ஊர் ஊர்வலமாக கொண்டு சென்று காசிமேடு N4 கடற்கரையில் கரைக்கப்பட்டன. இதற்கு முன்னதாக, மேளதாளங்களுடன் பக்தர்கள் உற்சாகமாக நடனமாடியபடி தண்டையார்பேட்டை நேதாஜி நகர்ப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளை வாகனத்தில் ஊர்வலமாக கொண்டு சென்றனர்.