அரியலூர்: ஜெயங்கொண்டம் அருகே கடந்த ஆண்டு நடைபெற்ற கோயில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறு காரணமாக, இந்தாண்டு திருவிழாவின் போது முன் விரோதத்துடன் பழி தீர்த்துக் கொள்ளும் வகையில், கூலித் தொழிலாளியை கத்தியால் தாக்கி கொலை செய்ய முயற்சித்த அண்ணன், தம்பி ஆகிய இருவரையும் ஜெயங்கொண்டம் போலீசார் இன்று (ஏப்.24) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்த கல்லாத்தூர் அருகே உள்ள தண்டலை மருக்காலங்குறிச்சி கிராமம், மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சூர்யா (24). கூலித் தொழிலாளியான இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வீரமணி மகன் விஜயராகவன் (26) என்பவருக்கும் கடந்த ஆண்டு திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த முறை நடைபெற்ற திருவிழாவின் போது, முன் விரோதத்தை மனதில் வைத்துக்கொண்டு, விஜயராகவன் சூர்யாவை பழிதீர்க்கத் திட்டமிட்டுள்ளார். திட்டமிட்டபடி, சூர்யாவை விஜயராகவன் மற்றும் அவரது சகோதரர் பரமேஸ்வரன் ஆகிய இருவரும் சேர்ந்து தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளனர்.
இந்நிலையில், விஜயராகவன் தான் மறைத்து வைத்திருந்த சூரிக் கத்தியால் சூர்யாவைத் தாக்கி கொலை செய்ய முயற்சித்துள்ளார். அப்போது சுதாரித்துக் கொண்ட சூர்யா ஒதுங்கியுள்ளார். இருப்பினும், கத்தி சூர்யாவின் உடலில் பட்டு காயங்கள் ஏற்பட்ட நிலையில், மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின் மேல் சிகிச்சைக்காக அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து, சம்பவம் குறித்து சூர்யா ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்தப் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விஜயராகவன் மற்றும் அவரது சகோதரர் பரமேஸ்வரன் (21) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.