மதுரை: மதுரை சின்ன சொக்கிகுளம் பகுதியில் உள்ள ஜேஸி ரெஸிடென்ஸி, விமான நிலைய சாலையில் உள்ள அமீகா ஹோட்டல், பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள மதுரை ரெஸிடென்ஸி, காளவாசல் அருகே உள்ள ஜெர்மானுஸ் ஹோட்டல் உள்ளிட்ட 4 நட்சத்திர விடுதிகளுக்கு இந்த மிரட்டல் விடப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, இந்த 4 நட்சத்திர விடுதிகளுக்கும் மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் தனித்தனி பிரிவுகளாகச் சென்று, அந்த விடுதிகளின் அனைத்து பகுதிகளிலும் தீவிர சோதனை நடத்தினர். இந்த 4 நட்சத்திர விடுதிகளிலும் பெரும்பாலும் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் வந்து தங்குவது வழக்கம்.
இந்நிலையில், இந்த நட்சத்திர விடுதிகளில் தங்கியிருந்த சுற்றுலாவாசிகள் மற்றும் விடுதி ஊழியர்கள் வெடிகுண்டு மிரட்டல் தகவல் அறிந்து பெரும் அச்சமடைந்தனர். இதையடுத்து, மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் இந்த 4 நட்சத்திர விடுதிகளிலும் தீவிர சோதனை ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: ரூ.2 கோடி பணம் கேட்டு மிரட்டினார்.. நடிகை பார்வதி நாயரின் உருக்கமான அறிக்கை!
அந்த சோதனையில் எந்தவித வெடிகுண்டும் வைத்ததாக தெரிய வராத நிலையில், இந்த போலியான தகவல் கொடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது குறித்து போலீசாரும், சைபர் கிரைம் காவல்துறையினரும் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல், கடந்த திங்கட்கிழமையும் (செப்.30) மதுரையில் உள்ள முக்கிய பள்ளிகளுக்கு இது போன்று மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இது போன்ற வெடிகுண்டு மிரட்டல் சம்பவங்களால் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்