சென்னை: இனம், மொழி, ஜாதி வெறியைத் தூண்டி அரசியல் நடத்தும் குடும்ப கட்சிகளின் தேர்தல் அறிக்கை போலக் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை உள்ளது என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை விமர்சித்து பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோயம்புத்தூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது, “ஏப்ரல் 19 முதல் ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை, கட்சியின் முன்னாள் தலைவர்கள் சோனியாவும், ராகுலும் வெளியிட்டுள்ளனர். 2014, 2019 ஆகிய இரு மக்களவைத் தேர்தல்களில் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூடப் பெற முடியாத அளவுக்கு, காங்கிரஸ் கட்சியை இந்திய மக்கள் படுதோல்வி அடையச் செய்தார்கள்.
சுதந்திர இந்தியாவில் 55 ஆண்டுக் காலம் ஊழல், குடும்ப ஆட்சி நடத்திய காங்கிரஸ் கட்சியால், கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி, அதிகாரம் இல்லாமல் இருக்க முடியவில்லை. அதனால், தங்களைப் போல ஊழல், குடும்ப ஆட்சி நடத்தி வரும் மாநிலக் கட்சிகள் ஆதரவுடன் எப்படியாவது ஆட்சியைப் பிடித்து விடலாம் என்று கனவு கண்டு வருகிறார்கள். அதற்காக மக்களை ஏமாற்ற, தேர்தல் அறிக்கை என்ற பெயரில் வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளனர்.
கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாதம் 6 ஆயிரம் ரூபாய் தருவோம் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தது. அதை மக்கள் நம்பத் தயாராக இல்லை என்பதைத் தேர்தல் முடிவுகள் காட்டின. இந்த முறைப் பெண்களுக்கு ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளனர். கடந்த 75 ஆண்டுகளாகக் காங்கிரஸ் கட்சியின் ஏமாற்று வேலைகளைப் பார்த்து வரும் இந்திய மக்கள், இந்த பொய் புரட்டுகளை எல்லாம் நம்ப மாட்டார்கள்.
மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வைக் கொண்டு வந்ததே காங்கிரஸ் கட்சி தான். ஆனால் இப்போது மக்களை ஏமாற்ற நீட் தேர்வை மாநில அரசு விரும்பினால் நடத்திக் கொள்ளலாம் என்று வாக்குறுதி அளித்துள்ளனர். இது மருத்துவ கல்வியையே சீர்குலைக்கும் முயற்சி. தங்கள் அரசியல் சுய லாபத்திற்காக மாணவர்கள் எதிர்காலத்தோடு விளையாடும் காங்கிரஸ் கட்சியை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.
பாஜக ஆதரவுடன் இருந்த மத்திய அரசு தான் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கியது. அதை நடைமுறைக்குக் கொண்டு வராமல் எவ்வளவு முடியுமோ அவ்வளவு காலம் தாழ்த்தியது காங்கிரஸ். இப்படிப்பட்ட காங்கிரஸ் கட்சி இன்று பிற்படுத்தப்பட்டோர் காவலனாக புதிய வேடமிட்டு வருவதைக் கண்டு மக்கள் ஏமாற மாட்டார்கள். இட ஒதுக்கீட்டு வரம்புக்குள் வராத, பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழைகளுக்காகவே 10 சதவீத இட ஒதுக்கீட்டை பாஜக அரசு கொண்டு வந்தது.
இட ஒதுக்கீடு விவகாரத்தில் மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்திக் குளிர் காய நினைக்கும் காங்கிரஸ் கட்சியை மக்கள் நிச்சயம் கண்டிப்பார்கள். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையைப் படிக்கும் போது, ஜாதி, இனம், மொழி வெறியைத் தூண்டி அரசியல் நடத்தி வரும் ‘இண்டி’ கூட்டணியில் உள்ள குடும்ப அரசியல் நடத்தும் மாநிலக் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளின் தொகுப்பு போல உள்ளது. தேசிய கட்சியாக இருந்த காங்கிரஸ் இன்று மாநிலக் கட்சியாகச் சுருங்கிவிட்டது.
அதனால் தான், மாநிலக் கட்சிகள் போலப் பிரிவினையைத் தூண்டும் பல்வேறு வாக்குறுதிகளை அள்ளித் தெளித்துள்ளது. இதற்கு இந்த மக்களவைத் தேர்தலில் இந்திய மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். காங்கிரஸ் கட்சியை மீண்டும் படுதோல்வி அடையச் செய்வார்கள். கடந்த 10 ஆண்டுக்கால மோடி ஆட்சியில் தான், அனைவருக்கும் குடிநீர், கழிப்பறை, சமையல் எரிவாயு இணைப்பு, மின் இணைப்பு, ரேஷனில் உணவு தானியங்கள் என்று அடிப்படை வசதிகள் சாத்தியமாகியிருக்கிறது.
நெடுஞ்சாலைகள், அதிவிரைவுச் சாலைகள், மேம்பாலங்கள், புதிய ரயில் பாதைகள், புதிய ரயில்கள், துறைமுக மேம்பாடு, புதிய விமான நிலையங்கள், புதிய மருத்துவக் கல்லூரிகள், புதிய உயர்கல்வி நிறுவனங்கள் என்று அடிப்படை கட்டமைப்பில் இந்தியா அடைந்திருக்கும் வளர்ச்சியை உலகமே மிரட்சியுடன் பார்த்துக் கொண்டிருக்கிறது. அதன் பலன்களை மக்கள் அனுபவிக்கத் தொடங்கியுள்ளனர். எனவே, மூன்றாவது முறையாகப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக ஆட்சி அமைவது உறுதி” என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: "கூரை ஏறி கோழி பிடிக்கத் தெரியாதவன் வானத்தைக் கிழித்து வைகுண்டம் போனானாம்" - ஸ்டாலினை விமர்சித்த ஈபிஸ் - Lok Sabha Election 2024