கோயம்புத்தூர்: பாஜக மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம், தனக்கு கொலை மிரட்டல் வருவதாக கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனுவை இன்று (ஜூன் 13) அளித்தார். அதன் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தேர்தல் முடிந்த பிறகு சட்டம் ஒழுங்கு சீர்குளைந்துள்ளது. அண்ணாமலையை கொச்சைப்படுத்தி பேசுவது மட்டுமல்லாமல், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆட்டின் கழுத்தில் அண்ணாமலை படத்தை மாட்டி நடுரோட்டில் வைத்து வெட்டியுள்ளார்கள். அங்கு பாஜகவினர் புகார் அளித்தும் இந்த செயலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்படவில்லை.
எனது முகநூல் பக்கத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் கண்ட துண்டமாக வெட்டுவோம் என தெரிவித்துள்ளனர். இவர்கள் யார் என்பதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆட்டைப் போல தன்னை வெட்டுவதாக தெரிவித்து வருகின்றனர். காவல்துறைக்கு தெரியாமல் இது நடக்க வாய்ப்பில்லை.
இந்த சம்பவங்கள் அனைத்தும் கீழ்த்தரமான அரசியலாக உள்ளது. சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்து வருகிறது. ஆட்டை வெட்டுவது வேறு, ஆட்டில் அண்ணாமலை புகைப்படத்தை மாட்டி வெட்டுவது வேறு. அன்றைக்கே இது தடுக்கபட்டிருந்தால், இப்படி தொடர்ந்து கொலை மிரட்டல் வந்திருக்காது. அந்த கட்சியில் உள்ள தலைவர்கள் தடுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
தமிழிசை சௌந்தரராஜன், அமித்ஷா பேசுவது கண்டிப்பு என எப்படி சொல்ல முடியும்? அவர்கள் என்ன வேண்டுமானாலும் பேசியிருக்கலாம், நமக்கு எப்படி தெரியும்?” என்றார்.