கோயம்புத்தூர்: கோவை அரசு மருத்துவமனையில் நேற்றைய முன்தினம் (ஆக.14) பயிற்சி பெண் மருத்துவரிடம் தவறாக நடக்க முயற்சித்ததாக வடமாநிலத்தைச் சேர்ந்த நபர் ஒருவரைப் பிடித்து ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இதனை அடுத்து, அந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டதில், அவர் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும், சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் தெரியவந்துள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இச்சம்பவத்தைக் கண்டித்தும் மற்றும் கொல்கத்தாவில் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது தொடர்பாகவும் கோவை அரசு மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் போராட்டம் மேற்கொண்டனர். மேலும், நாளைய தினமும் (ஆக.17) மருத்துவர் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, கோவை அரசு மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவரிடம் தவறாக நடக்க முயன்ற வடமாநில நபரை போலீசாரிடம் பிடித்துக் கொடுத்த விவகாரம் தொடர்பாகவும், பயிற்சி மருத்துவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என வலியுறுத்தியும், கோவை அரசு மருத்துவமனையின் பயிற்சி மருத்துவர்களுக்கு ஆதரவாக பாஜக மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம், கோவை அரசு மருத்துவமனையின் இருப்பிட மருத்துவ அலுவலர் சரவண பிரியாவை நேரில் சந்தித்து கலந்தாலோசித்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், "கோவை அரசு மருத்துவமனையில் நடைபெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கொல்கத்தாவில் பெண் மருத்துவர் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டது போன்று தமிழகத்திலும் நடைபெற்றுவிடக் கூடாது.
கோவை அரசு மருத்துவமனையில் பாதுகாப்புக்கான எந்த விதமான வசதிகளும் இல்லை. அடிப்படை வசதிகளும் கேள்விக்குறியாக உள்ளது. மருத்துவர்களுக்கு கழிப்பிட வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை, மருத்துவர்களின் தேவைகளைக் கேட்டறிந்து உடனடியாக அதனை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும். இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.
இதன் தொடர்ச்சியாக, இச்சம்பவத்தில் ஈடுபட்டவர் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, "இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அவர் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பதிலளித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: “ஒரு தாய் ஸ்தானத்தில் இருக்கும் மம்தா ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?”- கொல்கத்தா விவகாரத்தில் குஷ்பூ ஆவேசம்!