திருச்சி: நாடு முழுவதும் ரயில் நிலையங்களை நவீனப்படுத்தவும், பயணிகள் வசதிகளை மேம்படுத்தவும் 'அம்ரித் பாரத்' ரயில் நிலைய திட்டத்தை (Amrit Bharat Station Scheme) மத்திய அரசு அறிமுகப்படுத்திச் செயல்படுத்தி வருகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் சுமார் 1,275 ரயில் நிலையங்கள் நவீன மயமாக்கப்பட உள்ளன. அதன் ஒரு பகுதியாக இன்று (பிப்.26) நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சியில், தமிழ்நாட்டில் உள்ள 32 ரயில் நிலையங்களை ரூ.803.78 கோடி செலவில் தரம் உயர்த்த அடிக்கல் நாட்டப்பட்டது. அதேபோல், ரூ.476.72 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 4 சாலை மேம்பாலங்கள் மற்றும் 106 சுரங்கப்பாதைகள் வாகன ஓட்டிகளின் பயன்பாட்டிற்காகத் துவக்கி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், மணப்பாறை ரயில் நிலையம் ரூ.10.11 கோடி மதிப்பில் நவீன மயமாக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வர இருக்கிறது. அதற்கான நிகழ்ச்சியை இன்று (பிப்.26) ரயில்வே துறையினர் மணப்பாறை ரயில் நிலையத்தில் ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கலந்து கொண்டார். நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து மேடையில் பேசிய கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, "ரயில்வேயின் டிக்கெட் விலை நான்கு மடங்கு உயர்த்தப்பட்டுள்ள நிலையில், ரயில் பயணிகளுக்குத் தேவையான வசதிகளையும் செய்து கொடுப்பதில் தாமதப்படுத்தப்படுகிறது" என்று தனது குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இதற்கு அங்கிருந்த பாஜகவினர் பாரத் மாதா கி ஜே என்றும், எம்.பி ஜோதிமணியை மேடையை விட்டு கீழே இறங்க வேண்டும் என்றும் கண்டன கோஷங்களை முழக்கமிட்டனர். இதனால் எம்.பி ஜோதிமணி தனது உரையை முடித்து விட்டுப் புறப்படத் தயாரானார்.
அப்போது பாஜக பெண் நிர்வாகி ஒருவர் எம்.பி. ஜோதிமணியின் கார் வரை சென்று அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
இதையும் படிங்க: 10 ஆண்டுகளில் இருமடங்காக அதிகரித்த மாதாந்திர குடும்பச் செலவு.. ஆய்வு முடிவு கூறுவது என்ன?