கோயம்புத்தூர்: நாடாளுமன்ற தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை முதல் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் உள்ள பல்வேறு வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், கோவை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் காலை முதல் அரசியல் பிரமுகர்கள் உட்பட பலர் தங்களது வாக்குகள செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கோவை டாடாபாத் பகுதியில் உள்ள பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தனது குடும்பத்தினருடன் வந்து வரிசையில் நின்று தனது வாக்கினை செலுத்தினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது கோவையில் பாஜகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக புகார் வந்துள்ளது குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, "ஆலந்துறை பகுதியில் பூத் ஏஜெண்டுகளுக்கு தேர்தல் செலவுகளுக்காக கொடுக்க மண்டல நிர்வாகிகள் கொண்டு சென்ற பணத்தை பிடித்து, அது பாஜகவினர் வாக்காளர்களுக்கு கொடுக்க எடுத்துச் செல்லப்பட்ட பணம் என பொய்யாக புகார் அளித்துள்ளனர்.
திமுகவும், அதிமுகவும் வெளிப்படையாக பணம் கொடுத்து வருகிறது. அது குறித்து பல புகார்கள் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், ஆன்லைன் புகார் அளிக்கும் சேவையும் முற்றிலுமாக முடங்கியுள்ளது. திமுகவினர் பணம் கொடுப்பதை மறைப்பதற்காக, பாஜக பணம் கொடுப்பதாக பொய்யான செய்திகளை பரப்பி வருகின்றனர். கோடிக்கணக்கான பணத்தை கொட்டிக் கொடுத்தாலும் கோவை தொகுதி மக்கள் தெளிவாக வாக்களிப்பார்கள்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: "பணம் கொடுத்ததை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகுவேன்" - வாக்களித்த பின் அண்ணாமலை சவால்!