சென்னை: காயிதே மில்லத் 129வது பிறந்த நாளை ஒட்டி, சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அவரது நினைவிடத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு, ரகுபதி, சாமிநாதன் கணேசன் ஆகியோர் மலர் போர்வை வைத்து மரியாதை செலுத்தினர். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு கூறுகையில், “சிறுபான்மை இன மக்களுக்கு ஆதரவு தரக்கூடிய ஆட்சியாக திமுக ஆட்சி உள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் வெற்றி, முதலமைச்சரின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி.
திமுகவை துடைத்தெறிவோம் என பாஜக கூறியது அதனை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. தமிழக மக்கள் முதலமைச்சருக்கு முழு ஆதரவாக உள்ளனர். கோவையில் திமுக டெபாசிட் வாங்காது என்று கூறிய பாஜகவினர் தற்பொழுது பல தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளனர்.
அதிமுக ஏழு தொகுதிகளில் டெபாசிட் இழந்தது குறித்த கேள்விக்கு, தேர்தல் முடிந்தவுடன் நாங்கள் உங்களை பார்த்துக் கொள்கிறோம் என அதிமுகவினர் கூறினார்கள் தற்போது அவர்கள் பார்த்துக் கொள்ளட்டும். முதலமைச்சர் சொல்வதை கேட்பவர்கள் நாங்கள் கீழே இருந்து வேலை செய்பவர்கள்" என்று கூறினார்.
முன்னதாக அமைச்சர் சாமிநாதன் கணேசன் பேசியதாவது, “ஒவ்வொரு வருடமும் காயிதே மில்லத் அவர்களின் பிறந்தநாள் திமுகவின் சார்பில் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு தமிழ்நாடு அரசின் சார்பிலும், திமுக சார்பிலும் காயிதே மில்லத் பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
சிறுபான்மை மக்களுக்கு ஆதரவாக செயல்படக்கூடிய ஆட்சியாக திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. நாடாளுமன்றத் தேர்தல் நல்ல முடிவுகளை தமிழ்நாட்டிற்கு தந்துள்ளது. அனைத்து மதத்தைச் சேர்ந்த மக்களும் திமுக கூட்டணி ஆதரவு அளித்த காரணத்தால் இன்று 40க்கு 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோன்" என்றார்.
இதையும் படிங்க: தமிழகத்தில் பாஜக நிலை? ராகுல் காந்தி ஸ்டைலில் பதில் சொன்ன ஜோதிமணி!