சென்னை: பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி அக்டோபர் 2ஆம் தேதி வரை பாஜக சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக, இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் பாஜக மருத்துவ அணி மாநில தலைவர் பிரேம் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட இலவச மருத்துவ முகாமை பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா தொடங்கிவைத்தார். இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு அளிக்கப்படும் மருத்துவ ஆலோசனைக் குறித்து ஆய்வு செய்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், "ஆம்ஸ்டிராங் கொலை வழக்கில் கைதான அனைவரையும் என்கவுண்டர் செய்துவிட்டால் வழக்கு சரியாகிவிடும் என நினைக்கிறேன். அதற்குமேல் சொல்வதற்கு எதுவுமில்லை. திமுக - காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் 600-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கொலை செய்யப்பட்டனர்.
பிரதமர் மோடி ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் ஒரு மீனவர் கூட கொலை செய்யப்படவில்லை. கிரிக்கெட்டில் இலங்கையை இந்தியா வீழ்த்திய நாளன்று இலங்கை கடற்படை மீனவர் ஒருவரை கொலை செய்தது. அதனைத் தவிர்த்து ஒருவர் கூட கொலை செய்யப்படவில்லை. இலங்கை - இந்திய இடையிலான மீனவர்கள் பிரச்சினையை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து உரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இந்திய கடற்படையும் இலங்கை மீனவர்களை கைது செய்து வருகிறது. கடந்த வாரம் வரை கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் விடுதலை செய்யபட்டுள்ளனர். மேலும் இலங்கை மக்கள் அவர்களுக்கு தேவையான அரசை வாக்களித்து தேர்வு செய்துள்ளனர். இலங்கை அரசோடு, தமிழக மக்கள் நலனுக்காக எப்போதும் மத்திய அரசு தொடர்பில் இருக்கும், உறுதுணையாக இருக்கும்" என தெரிவித்தார்.
இதையடுத்து தி நகரில் உள்ள பாஜக மாநில தலைமையகமான கமலாலயத்தில் பாஜக மாநில ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச். ராஜா மற்றும் மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மாநில துணைத் தலைவர் கரு நாகராஜன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.
இதையும் படிங்க: நெல்லையில் பூணுல் அறுப்பா? - காவல்துறை அளித்த விளக்கம்!
அப்போது பேசிய ஹச் ராஜா, "சமீபத்தில் ராகுல் காந்தியின் அமெரிக்கா பயணத்தின் பொது, இட ஒதுக்கீட்டை நீக்குவேன் என்று கூறியிருந்தார். இது நேரு காலத்தில் இருந்தே ராகுல் காந்தி குடும்பம் பாடும் அதே ராகம் ஆகும். இட ஒதுக்கீடு தொடர்பாக பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு தாங்கள் தான் ஆதரவு என ராகுல் காந்தி பேசியுள்ளார். அமெரிக்காவில் பேசும் போது இட ஒதுக்கீட்டை தொடர்ந்து அமல்படுத்த முடியாது, அதனை நீக்கி விட வேண்டும்.
ராகுல் அமேரிக்காவில் இந்தியாவிற்கு தீங்கு விளைவிக்கும் ஆட்களை சந்திந்து வருவததோடு, இந்தியா நாடு குறித்து அவதூறு பேசி வருகிறார் எனவே நாம் ராகுலின் அமெரிக்க பயணத்தை கண்காணிக்க வேண்டும்.
அதனை மக்கள் மத்தியில் தோலுரித்து காட்ட வேண்டும். எனவே இது தொடர்பாக நாளைய தினம் டிஜிபி அலுவலகத்தில் பாஜக சார்பில் புகார் அளிக்க உள்ளோம். மேலும் காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் கூட்டணி காட்சிகளை எதிர்த்து வரும் 30ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும், பாஜக சார்பில் போராட்டம் நடத்த உள்ளோம்” என்றார்.
மேலும் பேசிய அவர், “ஆயுஸ்மான் பாரத் திட்டத்தில் இதுவரை 10 கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பலன் அடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் முதல்வரின் காப்பீடு திட்டம் என்றால் 2 லட்சம் தான், ஆனால் மத்திய அரசின் ஆயுஸ்மான் பாரத் திட்டத்தில் இலவச காப்பீடு 5 லட்சமாக வழங்கப்படுகிறது, எனவே இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்தி கொள்ள வேண்டும்" என்றார்.