தென்காசி: செங்கோட்டை நூலக வாசகர் வட்டமும், வாய்ஸ் ஆஃப் தென்காசி பவுண்டேசனும் இணைந்து 'போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச கையேடு வழங்கும் விழா' நேற்று (மார்ச் 11) நடத்தின. இந்த நிகழ்ச்சியில், தமிழக பாஜக வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு துணைத் தலைவர் ஆனந்த் கலந்து கொண்டார்.
இதைத்தொடர்ந்து, செங்கோட்டையில் உள்ள நூலகத்தில் வைத்து போட்டித் தேர்வு எழுதும் சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கையேடுகளை வழங்கிய ஆனந்த், படித்தலின் முக்கியத்துவத்தையும், கடின உழைப்பு பற்றியும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.
அப்போது பேசிய ஆனந்த், "லட்சியத்தில் முன்னேற படிப்பு மட்டுமல்ல; கடின உழைப்பும் அவசியம். இங்கு உழைப்பால் உயர்ந்தவர்களே அதிகம். ஆகையால், கடின உழைப்பின் மூலம் விடாமுயற்சி மேற்கொண்டு வெற்றி பெற என்னுடைய வாழ்த்துகள். தேர்வில் எல்லா நேரமும் வெற்றி என்பது சாத்தியமல்ல. எனவே, கவலைப்படாமல் தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் செல்ல வேண்டும்.
மத்திய அரசில் வேலை வாய்ப்புகள் அதிகம் உள்ளன. ஆனால், அதற்கு பலரும் முக்கியத்துவம் அளிப்பதில்லை. டிஎன்பிஸ்சி குரூப் 4, குரூப் 2 போன்ற தேர்வுகளுக்கே, அதிகப்படியாக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. ஆகையால், இனிவரும் காலங்களிலாவது மத்திய அரசின் வேலைவாய்ப்பில் பங்கேற்று வெற்றி பெறுங்கள்" என அறிவுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் போட்டித் தேர்வு எழுதும் மாணவர்கள் உட்பட நூலகத்திற்கு வருகை தரும் பிற மாணவர்கள் என சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். மேலும் இதில், சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பல நூலக வாசகர்களும், ஏராளமான கட்சி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
இதேபோல, தென்காசி மாவட்ட நூலக மையத்திலும் சுமார் 500-க்கும் மேற்பட்ட வாசகர்களுக்கு இலவச கையேடுகள் வழங்கப்பட்டன. அந்த வகையில், நேற்று மட்டும் சுமார் 800 பேருக்கு இலவச கையேடுகளை பாஜக வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு மாநிலத் துணைத் தலைவர் ஆனந்த் வழங்கினார்.
இதையும் படிங்க: பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் பணி; நில எடுப்புக்கான அறிவிப்பு வெளியீடு!