கோயம்புத்தூர்: கோவை மாவட்டம் சூலூர் பகுதியைச் சார்ந்த 30க்கும் மேற்பட்ட பாஜகவினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். அதில், "நடந்து முடிந்துள்ள மக்களவைத் தேர்தலில் கோவை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட சூலூர் பேரூராட்சியில் 148 மற்றும் 151 முதல் 160 வரை உள்ள வாக்குப்பதிவு மையங்களில், அகர வரிசைப்படி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர்களை வைக்கப்படாமல் தலைகீழாக வைக்கப்பட்டது.
இதன் காரணமாகப் பொதுமக்கள் குழப்பமடைந்தனர். ஆகவே, அந்தப் பகுதிகளில் மறு தேர்தல் நடத்த வேண்டும் மற்றும் இதனை மாற்றி வைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
இது குறித்து சூலூர் ஒன்றிய கிழக்கு மண்டல பாஜக தலைவர் ரவிக்குமார் கூறுகையில், "நடந்து முடிந்துள்ள மக்களவைத் தேர்தலின்போது வேட்பாளர்களின் பெயர்கள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் அகர வரிசையில் வைக்கப்படாமல், ஆளுங்கட்சிக்குச் சாதகமாக இருக்க வேண்டும் என்று தலைகீழாக மாற்றி வைக்கப்பட்டது.
இதனால், வாக்காளர்கள் குழப்பம் அடைந்தனர். இது குறித்து அங்குப் பணியில் இருந்த தேர்தல் அதிகாரிகளிடம் கேட்டபோது, சரியான பதில் அளிக்கவில்லை. எனவே, வாக்காளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், இந்தக் கோரிக்கையை ஆட்சியரிடம் வலியுறுத்தி உள்ளோம். அதே சமயம், கோவை மாவட்டத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. ஏராளமானோர் வாக்களிக்க வந்திருந்தும் அவர்களின் பெயர் வாக்காளர் பட்டியல் இல்லாததால் வாக்களிக்க முடியாமல் திரும்பிச் சென்றனர்.
இந்த நிலைக்கு யார் காரணம் என கண்டறிந்து அவர்கள் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால், மாநில பாஜக தலைவரின் உறிய ஆலோசனை பெற்று, கண்ட ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடுவோம்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: பாஜகவின் குறுகிய நோக்கத்தை மக்கள் நிராகரிப்பார்கள்: சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் விளாசல்!