நீலகிரி: தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில், அதிமுக, திமுக, பாஜக மற்றும் நாதக உள்ளிட்ட கட்சிகள், வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றது.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த வாரம் தொடங்கிய நிலையில் அரசியல் கட்சியினர், சுயேச்சை வேட்பாளர்கள் தொடர்ச்சியாக வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர். வேட்பு மனு தாக்கல் செய்யக் கடைசி நாள் மார்ச் 27 ஆம் தேதியாகும். மனு தாக்கலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ளதால் முக்கிய கட்சிகள் மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்கள் இன்று வேட்பு மனுவைத் தாக்கல் செய்யத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், நீலகிரி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் எல்.முருகன், வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக, பாஜக தலைவர் அண்ணாமலையுடன் பேரணியாக வந்துள்ளனர். இதேபோல், நீலகிரியில் அதிமுக சார்பில் போட்டியிடும், லோகேஷ் தமிழ்ச்செல்வன் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு ஆதரவாளருடன் வந்துள்ளார். இரு அணிகளின் பேரணி உதகை காபி ஹவுஸ் அருகே வந்தபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த பாஜகவினர் வேட்பு மனுவை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரி மு.அருணாவிடம் வழங்கியுள்ளனர். இதே நேரத்தில் அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வனும் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்துள்ளார். இரு கட்சிகளும் ஒரே நேரத்தில் மனு தாக்கல் செய்ய ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து, அதிமுக மாவட்டச் செயலாளர் கப்பச்சி வினோத், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் பாஜகவிற்கு சாதமாகச் செயல்படுகின்றனர் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது. இதனையடுத்து, பாஜக வேட்பு மனு தாக்கல் செய்த பிறகு, அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
இது குறித்து நீலகிரி அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் கூறுகையில், “வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக 11 முதல் 1 மணி வரை தயாராக இருந்தோம். ஆனால், காவல்துறையினர் எங்களுக்கு 12:30 மணி வரை அனுமதிக்கவில்லை. அதன் பின்னர் எங்களை அனுமதித்தனர். 12:45க்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த நிலையில் இங்கும் எங்களுக்குச் சிரமங்களை அளித்துள்ளனர். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரால் வளர்க்கப்பட்டவர்கள் நாங்கள். எந்த இன்னல்களுக்கும் சோர்வடைய மாட்டோம். இந்த தொகுதியில் இரட்டை இலையை மலரச் செய்வோம்” என்றார்.
இதையும் படிங்க: அதிமுக, பாஜக உள்ளிட்டவைகளின் வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் - Lok Sabha Election 2024