சென்னை: மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான யுபிஎஸ்சி சார்பில் ஆண்டுதோறும் சிவில் சர்வீஸ் எனப்படும் குடிமைப் பணிகளுக்கான தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்காக இந்த தேர்வு நடத்தப்படுகிறது.
இந்த நிலையில், 2023ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி குடிமைப் பணிகளுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. இந்தத் தேர்வில் பொதுப் பிரிவில் 347 பேரும், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் பிரிவில் 115 பேரும் ஓபிசி பிரிவில் 303 பேரும் பட்டியல் வகுப்பில் 165 பேரும் மற்றும் பழங்குடியினர் பிரிவில் 86 பேர்கள் என மொத்தம் 1016 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
இதில் இந்திய அளவில் தமிழகத்தைச் சேர்ந்த புவனேஷ் ராம் 41ஆம் இடத்தையும் தமிழக அளவில் முதல் இடத்தையும் பிடித்துள்ளார். இந்த நிலையில், தமிழகம் அளவில் முதல் இடம் பிடித்த புவனேஷ்ராம் வெற்றி குறித்துக் கூறுகையில், "யாரையும் ஒப்பிட்டு பார்க்காதீர்கள். இது உங்களுடைய வாழ்க்கை. நீங்களே உங்களுக்குப் போட்டியாளர்.
மனநிலை என்பது மிக முக்கியமான ஒன்று படிப்பதற்காக 18 மணி வரை செலவு செய்யலாம். ஆனால் மனநிலையைச் சரியாக வைத்துக் கொள்ளுங்கள் அது மிக முக்கியமான ஒன்றாகும். நண்பர்களைச் சந்தியுங்கள் உங்களுக்கு பிடித்தமான செயல்களுக்கு நேரம் செலவிடுங்கள். படிப்பிற்காக அதிக நேரம் செலவிடாதீர்கள் உங்களுடைய பொழுது போக்குக்காகவும் அதிக நேரம் செலவு செய்யாதீர்கள் இரண்டைச் சரியான அளவில் வைத்துக் கொள்ளுங்கள்" என தெரிவித்தார்.
மேலும், தமிழகத்தில் சேர்ந்த அனைத்து வெற்றியாளர்களுக்கும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பாராட்டை எக்ஸ் பக்க பதிவின் மூலம் தெரிவித்துள்ளார். அதில், "2023 சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து வெற்றியாளர்களுக்கும் வாழ்த்துகள். தேசத்திற்காகச் சேவை செய்யத் தொடங்கும் அவர்களது பயணத்திற்கு நல்வாழ்த்துக்கள். அவர்கள் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தட்டும்" என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 2023ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு - ஆதித்யா ஸ்ரீவஸ்தவா முதலிடம்! - 2023 UPSC Civil Service Exam Result