மதுரை : மதுரையைச் சேர்ந்த திருமாறன் தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சி வைத்து அதன் நிறுவன தலைவராக உள்ளார். இவர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில், தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், "அமைச்சர் பி.டி ஆர் பழனிவேல் தியாகராஜன் பற்றியும், அவரது குடும்பத்தினர் பற்றியும் அவதூறாக பேசிய வழக்கில் என் மீது மதுரை எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டுமென" மனுவில் கூறி இருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகி, "மனுதாரர் YouTube சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்து இருக்கிறார். அப்போதைய நிதி அமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தினரின் கண்ணியத்தை குறைக்கும் விதமாக பேசியுள்ளார். அதோடு மதப் பிரச்சனையை ஏற்படுத்தும் விதமாகவும் பேசி உள்ளார்.
இதனால் பொது அமைதிக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அளிக்கப்பட்ட புகாரின் கீழ் மனுதாரர் மீது 504, 505(2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மனுதாரர் தரப்பில் அவர் ஒரு குறிப்பிட்ட கட்சியின் தலைவர் என்பதால் அரசியல் உள்நோக்கத்தோடு அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆகவே அவர் மீது பதியப்பட்ட பிரிவுகள் பொருந்தாது.
மேலும் மனுதாரர் மீது அவதூறு வழக்கை மட்டுமே தொடர இயலும். ஆகவே, குற்றவியல் பிரிவுகளில் மனுதாரர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துவது சட்டத்தை துஷ்பிரயோகம் செய்வதாகவே இருக்கும். ஆகவே இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்" என வாதிட்டார்.
அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "மனுதாரரின் பேட்டி இரண்டு பாகங்களை கொண்டது. முதல் பாகம் அப்போதைய நிதி அமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தினரை பற்றிய அவதூறு. இரண்டு மதங்களுக்கிடையான ஒற்றுமையை குறைக்கும் வகையிலான பேச்சு உள்ளது.
அவர் மீது பதியப்பட்ட பிரிவுகள் பொருத்தமானவையே பொதுமக்களின் அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் பேசியதால் அவர் மீது ஏறத்தாழ 12 வழக்குகள் பதிவாகியுள்ளன. பேச்சு சுதந்திரம் எனும் பெயரில் இது போன்ற நடவடிக்கைகளை செய்வதை ஏற்க இயலாது. ஆகவே, மனுதாரர் வழக்கை எதிர்கொள்ள வேண்டும்" என வாதிட்டார்.
இதையும் படிங்க : அசோக் நகர் ஆட்டோ டிரைவர் கொலை வழக்கு: 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை ஐகோர்ட் தீர்ப்பு!
இரு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதி, மதங்களின் சொத்துக்கள் தொடர்பாக மனுதாரர் பேசிய விதம் ஏற்கத்தக்கது அல்ல. சமூக ஊடகத்தை பயன்படுத்தி தாங்கள் பேசுவது என்ன மாதிரியான விளைவுகளை பார்வையாளர்களிடமும், பொது மக்களிடமும், ஒட்டுமொத்த சமுதாயத்திடமும் ஏற்படுத்தும் என்பதை கருத்தில் கொள்ளாமல், நினைத்ததை எல்லாம் சமூக ஊடகங்கள் வழியாக பேசுவது தற்போது பேஷன் ஆகி வருகிறது. அது மிகவும் துரதிஷ்டவசமானது.
மதச்சார்பின்மை என்பது அரசியல் சாசனத்தின் அடிப்படை கட்டமைப்பின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது. மதம், மொழி, மதம் சார்ந்த நடவடிக்கைகள் என ஏராளமான வேறுபாடுகள் இருந்தாலும் 75 ஆண்டுகளுக்கும் மேலாக 'வேற்றுமையில் ஒற்றுமை' கொண்ட நாடாக இந்தியா உள்ளது. 'வேற்றுமையில் ஒற்றுமை' என்பது இந்தியாவால் ஏற்றுக் கொள்ளப்பட்ட மதச்சார்பின்மை என்ற அடிப்படை கோட்பாட்டிற்கு காரணம்.
மதத்தை தொடர்பாக பேசும் எவரும், அந்த பதிவு சமூக ஊடகங்களில் இலவசமாகப் பதிவேற்றப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஆகவே மத வெறுப்பை தூண்டும் பேச்சுக்கள் பொது அமைதியை குறைக்கும். உடனடியாக நடக்கவில்லை என்றாலும் ஏதேனும் ஒரு புள்ளியில் அது நிகழலாம்.
ஒவ்வொரு இந்திய குடிமகனும் அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் அடிப்படை கடமைகளையும் நினைவில் கொள்வது அவசியம். ஒவ்வொரு குடிமகனும் நிச்சயம் பின்பற்ற வேண்டிய கடமை. மத, மொழி மற்றும் பிராந்திய அல்லது பிரிவு வேறுபாடுகளை கடந்து அனைத்து இந்திய மக்களிடையே நல்லிணக்கத்தையும், பொதுவான சகோதரத்துவ உணர்வையும் மேம்படுத்துவதே அத்தகைய அடிப்படை கடமையாகும்.
இந்த வழக்கை பொறுத்தவரை காவல் துறையும், கீழமை நீதிமன்றமும் இயந்திரத்தனமாக செயல்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கை பொறுத்தவரை மனுதாரர் மீது பதியப்பட்ட பிரிவுகள் என்பது பொருந்தாது. ஆதலால் இந்த வழக்கை ரத்து செய்து உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது" என நீதிபதி தெரிவித்தார்.