மதுரை: உலகமே வியக்கும் மிகப்பெரும் தொன்மை சிறப்பிற்குரிய ஓரிடமாக கீழடி மாறியுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகாவில் அமைந்துள்ள இந்த தொல்லியல் மேடு, இதுவரை 9 கட்ட அகழாய்வுகளை நிறைவு செய்துள்ளது. இந்திய தொல்லியல் துறையால் இந்த இடம் அடையாளம் காணப்பட்டு, கடந்த 2015-ஆம் ஆண்டு, தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவால் தொடங்கப்பட்டது.
முதல் இரண்டு அகழாய்வுகளை அமர்நாத்தும், 3-ஆம் கட்ட அகழாய்வினை ஸ்ரீராமனும் மேற்கொண்டனர். அதற்குப் பிறகு 4-ஆம் கட்ட அகழாய்வு தொடங்கி, தற்போது வரை தமிழக தொல்லியல் துறை மேற்கொண்டு வருகிறது. பெருமைக்குரிய கீழடி அகழாய்வுக் களத்தை முதன் முதலில் கண்டறிந்ததுடன், அதனை உலகிற்கு அறிய தருவதற்காக பல்வேறு முயற்சிகளை 50 ஆண்டுகளுக்கு முன்னரே மேற்கொண்டவருமான ஆசிரியர் வை.பாலசுப்பிரமணியத்தின் கையால்தான், கடந்த 2015-ஆம் ஆண்டு மார்ச் 11-ஆம் தேதி முதன் முதலாக அங்கு குழி வெட்டப்பட்டு, அகழாய்வுப் பணிகள் துவங்கி வைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
தொல்லியல் வட்டாரத்தால் அடையாளப்படுத்தப்பட்ட வை.பாலசுப்பிரமணியம், கடந்த 50 ஆண்டுகளாக தான் சேமித்து வைத்துள்ள அந்த காலகட்ட நினைவுகளை நமது ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்காக வழங்கினார். இது குறித்து அவர் நம்மிடையே பேசுகையில், “கடந்த 1973-ஆம் ஆண்டு கீழடியிலுள்ள அரசுப் பள்ளியில் நானும், எனது மனைவி சுபத்ராவும் முறையே வரலாறு மற்றும் அறிவியல் ஆசிரியர்களாக பணியில் சேர்ந்தோம். அப்போது மாணவர்கள் வசிக்கக்கூடிய பகுதிகளில் இருக்கக்கூடிய பழங்காலக் கோயில்கள், கட்டடங்கள், ஓலைச்சுவடிகள் உள்ளிட்டவைகள் குறித்து தெரிவித்தால் 10 மதிப்பெண்கள் தருவேன் என்று சொல்வது வழக்கம்.
1974-இல் கீழடியில் மண்டையோடு: அந்த சமயம் நான் கீழடிக்கு மாற்றலாகி வந்தபோது, 1974-இல் ஒரு மாணவர், அவரது வீட்டில் கிணறு தோண்டியபோது, அங்கே பெரிய பெரிய செங்கற்கள் உள்ளன என்று கூறினார். உடனே நான் மாணவர்களை அழைத்துக் கொண்டு அந்த இடத்தைச் சென்று பார்த்தேன். அங்கிருந்து ஒரு செங்கல், சிறு குவளை, மனிதத் தலையோடு கழுத்து வரையுள்ள ஒரு சுதை வடிவம், நாணயம், கருப்பு மணிகள், அதனோடு ஒரு மண்டை ஓடு இவற்றையெல்லாம் எடுத்து வந்தோம்.
அப்போது, ராமநாதபுரம் ஆட்சியருக்கு இந்தத் தகவலைக் கொண்டு போய் சேர்த்தேன். அவரிடமிருந்து எந்த விதமான பதிலும் இல்லை. இந்தச் சூழலில்தான், கடந்த 1976-ஆம் ஆண்டு தமிழ்நாடு தொல்லியல் துறையின் சார்பாக, மதுரை மகாலில் நடைபெற்ற பயிற்சியரங்கில் நான் கண்டெடுத்த பொருட்கள் பற்றி குறிப்பிட்டேன்.
இதனைப் பார்த்த தொல்லியல் துறையினர், இது சங்க காலத்தைச் சேர்ந்தது என்றனர். உடடினயாக இந்த விவரம் குறித்து அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் தெரியப்படுத்தினோம், மறுநாள் அனைத்து நாளேடுகளிலும் 'மதுரை அருகே கொந்தகையில் சங்க கால தொல்லியல் பொருட்கள் கண்டெடுப்பு' என தலைப்புச் செய்தியாக வந்தது.
இதனையடுத்து, அன்றைய ராமநாதபுரம் மாவட்டத்தில் 200க்கும் அதிகமான கிராமங்களுக்குச் சென்று ஆய்வுகளை மேற்கொண்டோம். மதுரையில் புத்த மதமே இல்லை என்று கூறப்பட்டு வந்தது. அச்சமயத்தில்தான், 1981-ஆம் ஆண்டில் திருப்புவனம் கால்வாயில் பெரிய புத்தர் சிலையைக் கண்டெடுத்து தொல்லியல் துறையில் ஒப்படைத்தோம். அது இன்றைக்கும் மகாலில் உள்ளது. சமணத்துடன் புத்தமும் மதுரையில் இருந்தது என்பதற்கான சான்றாக எங்களுடைய கண்டுபிடிப்பு அமைந்தது.
அமர்நாத் ராமகிருஷ்ணா வருகை: அதற்கு பிறகுதான் கடந்த 2013-2014ஆம் ஆண்டில் மத்திய தொல்லியல் துறை வைகை கரையோரம் ஆய்வினை மேற்கொள்ள தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா தலைமையில் குழு ஒன்றை அனுப்பியது. நானும் அவர்களை அழைத்துக் கொண்டு கீழடிக்குச் சென்றேன். 1974 வாக்கில், நான் கண்டறிந்த அந்தப் பகுதி புஞ்சை மேடாக இருந்தது. ஆனால், 2014-இல் அந்த இடத்தை காணச் சென்றபோது, அவை அனைத்தும் தென்னந்தோப்பாக மாறிவிட்டன.
பின்னர், கிணறு வெட்டுவதற்காக தோண்டப்பட்ட அந்தக் குழியில் செங்கல் கட்டுமானம் தெரிந்தது. இதனைப் பார்த்த அமர்நாத், இது கி.மு.50க்கு முந்தையது என்று அறுதியிட்டுச் சொன்னார். இது போன்ற செங்கல் வடிவம் கி.மு.50க்குப் பிறகு உற்பத்தி செய்யப்படவில்லை. இது சர்வதேச அளவில் ஒப்புக் கொள்ளப்பட்ட உண்மை. இது சங்ககாலத்தைச் சார்ந்ததாக இருக்க வேண்டும். இந்த இடத்தை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்றார். பிறகு அப்பகுதி அனைத்தையும் அலசி பார்த்தபோது, நிறைய இடங்களில் கருப்பு-சிவப்பு பானையோடுகள் கிடைத்தன.
இது ஒரு தொல்லியல் மேடு என்பதை அவர்கள் உறுதி செய்துவிட்டு, அவர்களுடைய வைகைப் பயணத்தை தொடர்ந்தார்கள். அச்சமயம் அவர்கள் கண்டறிந்த 265 இடங்களில் ஆய்வுக்காக தேர்வு செய்தது கீழடியைத்தான். இது குறித்து மத்திய தொல்லியல் துறைக்கு அமர்நாத் அறிக்கை அளித்தவுடன், அவர்களும் ஆய்வுக்காக அனுமதி வழங்கினர்.
அகழாய்வு: இந்நிலையில், கடந்த 2015ஆம் ஆண்டு மார்ச் 11-ஆம் தேதி மத்திய தொல்லியல் துறையின் சார்பாக கீழடியில் முதற்கட்ட அகழாய்வுப் பணிகள் தொடங்கின. இந்த முதல் ஆய்விலேயே பல்வேறு தொல்பொருட்கள் கண்டறியப்பட்டன. இது அவர்களுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது
இதனையடுத்து, தொடர்ந்து 2-ஆம் கட்ட அகழாய்வுக்கும் மத்திய தொல்லியல்து றை அனுமதி அளித்தது. முதற்கட்ட அகழாய்வின்போது இப்படியொரு ஆய்வு நடக்கிறது என்பதே யாருக்கும் தெரியாது. 2-ஆம் கட்ட அகழாய்வில்தான் ஒரு குழியில் நீண்ட நெடிய செங்கல் கட்டட அமைப்பு ஒன்று கண்டறியப்பட்டது. அப்போதுதான் கீழடி அகழாய்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தத் தொடங்கியது. இதனையடுத்து, கீழடி உலகம் பேசுகின்ற ஒரு பொருளாக மாறிப்போனது. இன்றைக்கு 9 கட்ட அகழாய்வு முடிந்து, 10வது கட்டத்தை நோக்கி முன்னேறியுள்ளது.
இயற்கையின் நியதி: கடந்த 1974-இல் முதன் முதலாக கீழடியைக் கண்டபோது சாதாரண விசயமாகத்தான் தெரிந்தது. 2014-இல் அமர்நாத் குழுவினர் இங்கு வந்து பார்க்கின்ற போதுதான், கீழடியின் தொன்மை குறித்து எனக்கு முழு புரிதல் ஏற்பட்டது. ஆனால், இயற்கையின் நியதியை வியக்கிறேன். நான் இந்த ஊரிலேயே தொடர்ந்து இருக்கிறேன். இந்த இடத்தை அத்தனை எளிதில் யாராலும் கண்டறிய முடியாது. ஆக, இதனை இயற்கையின் நியதி என்றுதான் நான் நம்புகிறேன்.
கீழடியின் தெருக்கள் எங்கே? இந்த தொன்ம மேடு ஏறத்தாழ 110 ஏக்கர், அதாவது 4.5 ச.கி.மீ பரப்பளவு கொண்டது. மேற்கொள்ளப்படும் அகழாய்வுக் குழிகள் எல்லாம் முறையாக வரிசையாக தொடர்ந்து மேற்கொள்ளப்படாமல், இங்கொன்றும் அங்கொன்றுமாக இடம் விட்டு இடம் விட்டு செய்யப்படுவதால், ஒரு முழுமையான இடத்தை கண்டுபிடிக்க இயலவில்லை.
இதுவரை பத்து ஆய்வுகள் மேற்கொண்ட போதும் கூட கீழடி என்ற இந்த நகர நாகரிகத்தை, அதாவது இது தொழில் நகரமா அல்லது மக்கள் வாழ்ந்த நகரமா என தெரியவில்லை. இதற்கு ஒரு தெரு இருக்க வேண்டும். வீடு இருந்தால், அதற்கு வாசல் இருக்க வேண்டும். அவைகௌல்லாம் இன்று வரையிலும் கண்டுபிடிக்கப்படவில்லை. அந்த இடங்களை முறையாகத் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டால்தான் உண்மை புலப்படும். இதற்கு இடையூறாக இருப்பது, தனியார் நிலங்களே. 110 ஏக்கரும் 30க்கும் மேற்பட்ட விவசாயிகளின் தோப்புகளாகும்.
இது அவர்களுடைய வாழ்வாதாரம். இதனை எப்படி எடுப்பது? நமது அரசு எது எதற்கோ கோடிக்கணக்கில் செலவு செய்கிறது. தமிழனுடைய வரலாற்றை முன்னெடுத்துச் செல்கின்ற, காலத்தை முன் நகர்த்துகின்ற ஒரு அகழாய்வை முறையாக நடத்துவதற்கு உதவுகின்ற வகையில் இவ்விடங்களை முற்றிலுமாக கையகப்படுத்தி, அதன் மையப் பகுதியிலிருந்து தோண்டி அகழாய்வை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசிற்கு கோரிக்கை வைக்கிறேன்" என்றார்.
இதையும் படிங்க: கணவருக்காக தொடங்கிய ஆட்டோ பயணம்.. மகளிர் தினத்தில் மிளிரும் தென்காசி மர்ஜான்!