மதுரை: மதுரை, நரிமேடு பகுதியில் உள்ள எவிடென்ஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அதன் செயல் இயக்குநர் கதிர், திமுக எம்எல்ஏ-வின் மருமகள் மற்றும் மகனால் பாதிக்கப்பட்ட சிறுமி ஆகியோருடன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, "பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மருமகள் மார்லினா அன், மகன் ஆண்டோ மதிவாணன் ஆகிய இருவரும் உளுந்தூர்பேட்டை திருநருங்குன்றம் கிராமத்தைச் சேர்ந்த தலித் சிறுமி ரேகா என்பவரை வீட்டு வேலைக்காக அழைத்துச் சென்று கடந்த 8 மாத காலமாக அடித்து சித்திரவதை செய்து கொடுமைப்படுத்தியுள்ளனர்.
இதுகுறித்து திருவான்மியூர் காவல்துறையினர் 294b(324, 325, 506)1( பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989 பிரிவுகள் 3(1)(r), 3(1)(s) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நேற்று (ஜன.25) குற்றவாளிகள் இருவரும் கைது செய்யப்பட்டு இன்று (ஜன.26) காலை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இக்கொடுமையான வன்கொடுமை குறித்து எவிடென்ஸ் அமைப்பு ரேகாவிற்காக சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. கடந்த 10 நாட்களாக ரேகாவிற்கு மதுரையில் கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு வந்துள்ளது. மருத்துவ பரிசோதனையும் செய்யப்பட்டுள்ளது. ரேகாவின் கல்விச் செலவிற்காக எவிடென்ஸ் அமைப்பின் முயற்சியினால் ரூ.1 லட்சத்தி 50 ஆயிரம் நிதியுதவியும் அளிக்கப்பட்டுள்ளது.
நேற்று (ஜன.25) ரேகா சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சுமார் 10 பேர் கொண்ட மருத்துவர்களால் அவருக்கு மருத்துவ பரிசோதனையும் நடத்தப்பட்டது. காவல்துறை விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் தமிழ்நாடு அரசுக்கு எவிடென்ஸ் அமைப்பு சிவில் சமூகம் சார்பாக சில முக்கியமான பரிந்துரைகளை முன் வைக்கிறோம்.
குற்றவாளிகள் இருவருக்கும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும் வரை பிணை கொடுக்கக் கூடாது. அதற்குத் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது தம்பி சதீஷின் கல்வி செலவினை ஏற்க தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளிடமிருந்து ரூ.25 லட்சம் அபராதத்தினை வசூலித்து அத்தொகையினை சிறுமிக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட சிறுமி போன்று பல சிறுவர், சிறுமிகள் வீட்டு வேலைகளுக்காகவும், பல்வேறு தொழிலுக்காகவும் வெவ்வேறு பகுதிகளிலும், பிற மாநிலங்களிலும் கடத்தப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அரசு இவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
சிறுமிக்கு நீடித்த நிலைத்த நிலையான கவுன்சிலிங் வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்த வழக்கினை சென்னை நீதிமன்றத்தில் நடத்தப்படாமல் விழுப்புரம் நீதிமன்றத்தில் நடத்துவதற்குத் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிறுமியின் சார்பில் நியமிக்கக்கூடிய மூத்த வழக்கறிஞரையே அரசு குற்ற வழக்கறிஞராகத் தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும். கூலியே கொடுக்காமல் கடுமையான உழைப்பை வாங்கிய குற்றவாளிகள் மீது கொத்தடிமை ஒழிப்புச் சட்டம் 1976 மற்றும் வன்கொடுமை தடுப்பு திருத்தச் சட்டம் 2015 பிரிவு 3(1)(h) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும்.
மிக கொடூரமான காயங்களை ஏற்படுத்தியதனால் குற்றவாளிகள் மீது வன்கொடுமை தடுப்புத் திருத்தச் சட்டம் 2015 பிரிவு 3(2)(va) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: சென்னையில் குடியரசு தின விழா: களைகட்டிய அணிவகுப்பு.. விருது பெற்றவர்கள் விவரம் உள்ளே