திருவள்ளூர்: கவரப்பேட்டை அருகே பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்கு உள்ளானதற்கு ரயில்வே நிர்வாகத்தின் அலட்சியபோக்கே காரணம் என திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் குற்றம் சாட்டியுள்ளார்.
கர்நாடக மாநிலம், மைசூரில் இருந்து சென்னை பெரம்பூர் வழியாக பீகார் மாநிலம் தர்பாங்கா நோக்கி சென்று கொண்டிருந்த பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் (12578) இன்றிரவு 8.30 மணி அளவில் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் நின்றிருந்த சரக்கு ரயில் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
விபத்து நடைபெற்ற இடத்தை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்தில், "ஒடிசா மாநிலம் பாலாசோரில் நடைபெற்ற விபத்து போலவே இங்கும் விபத்து நடந்திருக்கிறது. இனி இது போன்ற விபத்து நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் நாடாளுமன்றத்தில் என்று கோரிக்கை விடுத்தேன்.
ரயில் விபத்துகளை தடுக்க கவாச் கருவி பொருத்தப்படும் என்று ரயில்வே அமைச்சர் கூறினார். ஆனால், எப்போது அதை பொருத்தப்போகின்றனர் என்று தெரியவில்லை. பாலாசோர் விபத்தின் அடிப்படையில் ஆய்வு செய்வதாக கூறினார்கள். என்ன ஆய்வு செய்தார்கள். என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்று தெரியவில்லை. அப்படி நடவடிக்கை எடுத்திருந்தால் இது போன்ற விபத்தை தடுத்திருக்க முடியும். இதற்கு ரயில்வே துறையின் அலட்சியமே காரணம்.
இதையும் படிங்க: பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து: ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அனந்த் மதுகர் சௌத்ரி ஆய்வு
இந்திய ரயில்வேயை தனியார் மயம் ஆக்கப்போவதாகவும், ஒப்பந்த முறையில் பணிகளை மேற்கொள்வதாகவும் கூறுகின்றனர். இதனால், நிரந்தர ஊழியர்கள் குறைக்கப்பட்டுள்ளனர். இருக்கும் ஊழியர்களுக்கு வேலை பளு அதிகரித்துள்ளது. கவரப்பேட்டை விபத்து என்பது ரயில் சிக்னல், ரயில் பாதை நிர்வகிப்பதில் நேரிட்ட கோளாறு காரணமாகவே நேர்ந்துள்ளது. இதற்கு ரயில்வே ஊழியர்களை குற்றம் சொல்ல முடியாது. ரயில்வே நிர்வாகமே இதற்கு பொறுப்பாகும்.
ரயில்களை இயக்கும் லோகோ பைலட்கள் தங்களுக்கு வேலைபளு அதிகம் இருப்பதாகவும், பணிக்கு இடையே ஓய்வு அவசியம் என்றும் வலியுறுத்துகின்றனர். அதனை ரயில்வே துறை கண்டுகோள்ளாமல் உள்ளது. கவரப்பேட்டையில் ரயில் விபத்து நேரிட்டதும் உள்ளூர் மக்கள் ஓடோடி வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். அவர்களின் மீட்ப்பு பணி காரணமாக விரைவில் பயணிகளை மீட்க முடிந்தது,"என்றார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்