தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கரந்தை ஆரம்ப சுகாதராநிலையத்தில் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மூலம் மீண்ட கர்ப்பிணிக்கு நேற்று (புதன்கிழமை) மருத்துவமனை நிர்வாகம் சார்பாக வளைகாப்பு விழா நடைபெற்றது. அப்போது நாடாளுமன்றத் தேர்தலில் '100 சதவீதம் வாக்களிக்க வேண்டும்' என்ற விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.
உத்தரபிரதேசம் மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஹேமந்த்குமார், பூனம் (23) தம்பதியினர், தஞ்சாவூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கரந்தை கொடிக்காலூரில் இயங்கி வரும் தனியார் அரிசி ஆலையில் கூலி வேலை செய்து வருகின்றனர்.
கரந்தை அருகே உள்ள சுங்கடத்தில் பகுதியில் வசித்து வரும் இவர் நிறை மாத கர்ப்பிணி என்பதால், இவருக்கு கரந்தை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு மார்ச் 3 ஆம் தேதி சென்றுள்ளார். அவருக்கு ஏப்ரல் மாதம் இரண்டாவது வாரத்தில் குழந்தை பிறக்கும் என மருத்துவர்கள் கணித்திருந்தனர்.
இந்நிலையில் அவருக்கு பரிசோதனை செய்ததில் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு 8.1 என்ற அளவில் இருந்ததால் பூனத்திற்கு இரத்தம், கர்ப்பகால இரத்த சோகை இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரை மேல் சிகிச்சைக்காக அரசு இராசா மிராசுதார் மகப்பேறு மருத்துவமனைக்கு பரிந்துரைத்தனர்.
கடந்த மார்ச் 10ஆம் தேதி அனுதிமதிக்கபட்ட அவருக்கு 1 யூனிட் ' ஓ ' இரத்த வகை இரத்தம் செலுத்தப்பட்டு, 4 தவணை அயர்ன் சுக்ரோஸ் ஊசி செலுத்தப்பட்டது. இதில் அவருக்கு இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு 10.6 என்ற அளவில் உயர்ந்திருந்ததால் மார்ச் 24ஆம் தேதி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
பின்னர் பூனம் வீட்டிற்கு சென்று கரந்தை நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார செவிலியர் பரிமளா மற்றும் பவித்ரா பரிசோதனைகளை மேற்கொண்டு தாயும் சேயும் நலமுடன் இருப்பதை உறுதி செய்தனர். இந்நிலையில் பூனம் தம்பதியினர் சொந்த ஊரான உத்திரபிரதேசத்திற்கு நேற்று (மார்ச் 27) இரவு இரயிலில் செல்ல இருந்தனர்.
இதனை அறிந்த தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி உத்தரவின்படி, மாநகர் நல அலுவலர் மருத்துவர் சுபாஷ்காந்தி தலைமையில், மருத்துவர் மணிமேகலை முன்னிலையில் கரந்தை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பூனத்திற்கு தமிழ்நாட்டுக் கலாச்சார முறைப்படியும், வளைகாப்பு விழா நடத்தினார்.
அப்போது எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 100 சதவீத வாக்களிக்க வேண்டும் என்பதை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எதிர்பாராமல் நடத்தப் பெற்ற இந்த வளைகாப்பு திருவிழாவால் ஹேமந்த்குமார், பூனம் தம்பதியினர் நெகிழ்ச்சி அடைந்தனர்.
அதே போல் வெளி மாநிலத்தைச் சேர்ந்த கர்ப்பிணிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தியது மட்டும் அல்லாமல் அதன் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய மருத்துவமனை நிர்வாகத்திற்கு மாநகராட்சி ஆணையருக்கும் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்துவருகின்றனர்.
இதையும் படிங்க: பெண்களுக்கு கட்டணம் இல்லை... பறவைகளுக்கு ரூ.444 டிக்கெட்... கர்நாடக அரசு பேருந்தில் விசித்திர நிகழ்வு! - Parrots Got Tickets In KSRTC Bus