திருநெல்வேலி: நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரே கட்டமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதனால், பல்வேறு பகுதிகளில் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், திருநெல்வேலியில் வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் 100 சதவிகிதம் வாக்களிக்க வலியுறுத்தி, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, திருநெல்வேலியில் தேர்தல் அழைப்பிதழ்களை வீடு வீடாகச் சென்று கொடுக்கும் நூதன விழிப்புணர்வு நிகழ்ச்சியை தேர்தல் நடத்தும் அதிகாரி, மாநகராட்சி ஆணையாளர் தாக்கரே சுபம் ஞானதேவராவ் மற்றும் உதவி ஆட்சியர் கிஷன் குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
அதன்படி, மூத்த குடிமக்கள் என்ற அடிப்படையில், பாளையங்கோட்டை, கிரிஜா நகர் பகுதியில் உள்ள விசுவாசம் (85) என்பவரது இல்லத்திற்கு, நேரடியாக அதிகாரிகள், மேளதாளம் மற்றும் தாம்பூல சீர்வரிசையுடன், தேர்தல் அழைப்பிதழ் மற்றும் தபால் வாக்குக்கான விண்ணப்ப படிவத்தையும் கொண்டு சென்று வாக்களிக்க அழைப்பு விடுத்தனர்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த நெல்லை மாவட்ட உதவி ஆட்சியரும், தேர்தல் விழிப்புணர்வு அதிகாரியுமான கிஷன் குமார், “100 சதவீதம் வாக்களிக்க வேண்டிய அவசியத்தை பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. புதிதாக விளையாட்டு வடிவில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும், ரோடு ஷோ போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், கடந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்குப்பதிவு குறைந்த இடங்கள் தொடர்பான கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. குறைவான வாக்குப்பதிவு நடைபெற்ற இடங்களில் கல்லூரி மாணவர்கள் அடங்கிய குழுக்கள் மூலம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வதுடன், தேர்தலில் வாக்களிக்க தவறியதன் காரணத்தையும் கேட்டறிந்து, 100 சதவிகித வாக்குப்பதிவுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும், பத்து நபர் அடங்கிய 20 குழுக்கள் மூலம் கணக்கெடுக்கும் பணி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது” என அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: விஜயகாந்த் மகன் விஜய பிரபாகர் விருதுநகரில் போட்டி..வெளியானது தேமுதிக வேட்பாளர் பட்டியல்! - Vijaya Prabhakar From Virudhunagar