சென்னை:
திருச்சி மாவட்டம், குண்டூரைச் சேர்ந்தவர் வசந்தா (80). இவர் ஓய்வு பெற்ற ஆசிரியர். இந்த நிலையில், வசந்தா கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக ஹைதராபாத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று தங்கி இருந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் வசந்தா ஹைதராபாத்தில் இருந்து விமான மூலம் சென்னை வந்தார். இதையடுத்து அவர் தாம்பரம் பேருந்து நிலையம் செல்வதற்காக பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த ஆட்டோவில் தாம்பரம் செல்வதற்காக ஏறியுள்ளார்.
இதையடுத்து தாம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்த ஆட்டோ திடீரென குரோம்பேட்டை பச்சமலை நோக்கி சென்றுள்ளது. அப்போது ஆட்டோவில் இருந்த வசந்தா ஏன் வேறு எங்கோ கூட்டி செல்கிறீர்கள் என ஆட்டோ ஓட்டுனரிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.
இதையடுத்து ஆட்டோ ஓட்டுனர் பச்சமலை அருகே சென்றபோது வசந்தா கழுத்தில் அணிந்து இருந்த 10 சவரன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு அவரை கீழே தள்ளிவிட்டு அங்கிருந்து ஆட்டோவை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த வசந்தா இது குறித்து தாம்பரம் காவல் நிலைய குற்ற பிரிவில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், செயின் பறிப்பில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுனர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இதையும் படிங்க: ஒரே சமூகத்தை சேர்ந்த ஆம்ஸ்ட்ராங்கை நான் ஏன் கொலை செய்யப் போகிறேன்?.. நாகேந்திரன் வாதத்தால் பரபரப்பு
குடும்ப செலவுக்கு செயின் பறிப்பு
இந்த நிலையில், தாம்பரம் கஸ்தூரிபாய் நகர், சாமியார் தோட்டத்தைச் சேர்ந்த ஓட்டுனரான கணேசன் தன் குடும்பத்தாரிடம் ''தான் 10 சவரன் தங்க நகையை திருடி வந்ததாக தெரிவித்து, அதனை அடகு வைத்து குடும்ப செலவுக்கு பார்த்துக் கொள்ளலாம்'' என கூறியுள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த கணேசனின் மகன் ராமச்சந்திரன் தந்தை திருடி வந்த தங்க சங்கிலியோடு தாம்பரம் காவல் நிலையம் அழைத்து வந்து நடந்ததை கூறி போலீசாரிடம் ஒப்படைத்தார்.
மகன் செய்த செயல்
இதையடுத்து ஆட்டோ ஓட்டுனர் கணேசனிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, தான் வீட்டு செலவுக்காக செயின் பறிப்பில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரிடமிருந்து 10 சவரன் தங்கச் சங்கிலியை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும், தனது தந்தையானாலும் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்த உடனே அவரை காவல் நிலையம் அழைத்து வந்து ஒப்படைத்த அவரது மகன் ராமச்சந்திரனை தாம்பரம் காவல் ஆணையர் அபின் தினேஷ் மோதக் வெகுவாக பாராட்டினார். இச்சம்பவம் தாம்பரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.