சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை பிரபல ரவுடி நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமன் உள்பட 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் வேலூர் மத்திய சிறையில் உள்ள பிரபல ரவுடி நாகேந்திரனை அவரது வழக்கறிஞர்கள் நேற்றைய தினம் சந்தித்து அஸ்வத்தமன் கைது குறித்து தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் சிறையில் இருக்கும் நாகேந்திரனை கண்காணிக்க தனி காவலர் நியமிக்கப்பட்டு, வழக்கு தொடர்பாக நாகேந்திரனின் ஆடியோ மற்றும் வீடியோ பதிவுகள் பெறப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஒரு ஆண்டுகளாக நாகேந்திரன் எத்தனை நபர்களை சிறையில் சந்தித்தார், அவர் யாரிடம் எல்லாம் உரையாடினார், அவர் மருத்துவமனைக்கு செல்லும்போது யாரை சந்தித்தார், என அவருடன் இருக்கும் காவலர் வைத்திருக்கும் சிறப்பு ரெக்கார்டிங் டிவைஸ் மூலம் தற்பொழுது ஆய்வு செய்யும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏற்கனவே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சம்போ செந்திலுக்கு, தொடர்பு இருக்கும் என காவல்துறையினர் தங்களது விசாரணையை மேற்கொண்டு வந்த நிலையில், தற்போது வேலூர் சிறையில் பிரபல ரவுடி நாகேந்திரன் தான் இந்த கொலைக்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்து, இருப்பார் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிகிறது.
மேலும் ரவுடி நாகேந்திரனின் மற்றொரு மகனும், பாஜக இளைஞர் அணி துணை தலைவருமான அஜித் ராஜ் இடமும் காவல்துறையினர் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே சிறையில் உள்ள சம்போ செந்திலின் கூட்டாளிகளை காவல்துறையினர், விசாரணை செய்ய முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரவுடி சம்போ செந்தில் அவ்வபோது தான் தங்கியிருக்கும் இடத்தை மாற்றிக்கொண்டே வருவதால், அவரை பிடிப்பதில் சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும், அவரை தேடும் பணியில் மும்பையில் காவல்துறையினர் தீவிரமாக இறங்கியுள்ளதாகவும், தகவல் தெரிவிக்கப்படுகிறது.
நாகேந்திரன் பெயர் சேர்ப்பு: இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 200-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் விசாரணை செய்துள்ளதாக தெரியவருகிறது. மேலும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்ந்து பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ரவுடி நாகேந்திரனை காவல்துறையினர் போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரணை செய்ய உள்ளதாக தகவல் வெளியான நிலையில், நாகேந்திரனின் பெயரும் ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்க்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆம்ஸ்ட்ராங் கொலை நடந்து ஒருமாத காலம் கடந்த நிலையில், இன்னும் இந்த கொலை அரசியல் காரணமா? ரவுடிகளின் பகையா? ரியல் எஸ்டேட் தொழில் மோதலா ? என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: அஸ்வத்தாமனை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு!