சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக பாஜக மாநிலத் துணைத் தலைவரும், வழக்கறிஞருமான பால் கனகராஜிடம் ரவுடிகள் தடுப்பு பிரிவு போலீசார் இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பினர். அதன் அடிப்படையில் சென்னை எழும்பூரில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் பால் கனகராஜ் ரவுடிகள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் முன்பு இன்று காலை 11 மணி அளவில் ஆஜரானார்.
இந்த விசாரணை மாலை 6:30 மணி வரை, சுமார் 8 மணி நேரம் நடைபெற்ற நிலையில், பால் கனகராஜ்யிடம் பல்வேறு கேள்விகளை கேட்டு, போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில் விசாரணைக்கு பின் வெளியே வந்த வழக்கறிஞர் பால் கனகராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது,“ என்னுடைய செல்போன் விவரங்களின் அடிப்படையில் காவல்துறை தன்னை இன்று நேரில் அழைத்து விசாரணை நடத்தினர்.
பார் கவுன்சில் தலைவர் பதவி தேர்தலின் முன்விரதமாக இருக்குமோ என்ற கோணத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக பொறுப்பேற்றுள்ள ஆனந்தன் சந்தேகத்தை எழுப்பி இருந்தார். ஆனால் அந்த தேர்தலுக்கும் இந்த கொலைக்கும் எந்த சம்பவந்தமும் இல்லை என்பதை தெரிவித்துள்ளேன்.
தனிப்பட்ட முறையில் எந்த பிரச்சனையும் எனக்கும், ஆம்ஸ்ட்ராங்கிற்கும் கிடையாது. கடந்த 2017-க்கு பிறகு நாங்கள் நண்பர்களாக பழகி வந்துள்ளோம். அவ்வப்போது ஓன்றாக விழாக்களில் கலந்து கொண்டு உள்ளோம். எனக்கும் ஆம்ஸ்ட்ராங்கிற்கும் முன்விரோதம் எதுவும் கிடையாது கடந்த 2015-ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதன் பிறகு பேசி நாங்கள் சமாதானம் ஆகிவிட்டோம்.
அதன் பிறகு நட்பாகவே பழகினோம். அதேபோல, சிபிஐ விசாரணை வேண்டும் என சொல்லி குடும்பத்தினர், கோரிக்கை வைத்தனர். ஆனால் போலீசார் விசாரணை எந்த கோணத்தில் செல்கிறது என எனக்கு தெரியவில்லை. ரவுடி நாகேந்திரன் வழக்கு தொடர்பாக நான் நேரில் ஆஜராகவில்லை, ஆனால் நாகேந்திரன் புதுமனை புகு விழாவில் ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக நான் காவல்துறையிடம் பேசி இருந்தேன்.
காவல்துறை எனது செல்போனை பறிமுதல் செய்யவில்லை, என்னிடம் தான் செல்போன் உள்ளது. ஏற்கனவே கடந்த 4-ஆம் தேதி என்னிடம் வாய்மொழியாக விசாரணை மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளேன். முழுமையாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதால் மீண்டும் என்னை விசாரணைக்கு அழைக்க மாட்டார்கள்” எனத் தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; பிரபல ரவுடி நாகேந்திரன் கைது!