மதுரை: இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்தின் சார்பில், அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மதுரை மாவட்டம் மேலூர், அரிட்டாபட்டி, அழகர் கோயில் சுற்றியுள்ள கிராம விவசாயிகள் ஆட்சியரிடம் முறையிட்டுள்ளனர்.
டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைப்பதற்காக மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் உள்ள அரிட்டாபட்டி, மேலூர், சுருளிப்பட்டி, கிடாரிப்பட்டி, நாயக்கர் பட்டி, தெற்கு தெரு, வெள்ளாளப்பட்டி உள்ளிட்ட 11 கிராமங்களளை உள்ளடக்கிய சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நிலத்தை வேதாந்தாவின் துணை நிறுவனமான இந்துஸ்தான் ஜிங்க் என்ற நிறுவனம் ஏலத்தில் எடுத்துள்ளது. இதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
டங்ஸ்டன் கனிம சுரங்கம்:
இந்நிலையில், வாராந்திர விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று, வெள்ளிக்கிழமை (நவ.22) நடைபெற்றது. இதில், மேலூர், அரிட்டாபட்டி, அழகர் கோயில் சுற்றியுள்ள கிராம விவசாயிகள் கலந்துக்கொண்டு, அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய அரசு இத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், திருநெல்வேலியை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவித்தது போன்று, மதுரையை பாதுகாக்கப்பட்ட பண்பாட்டு சூழியல் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதற்கு பதில் அளித்து மாவட்ட ஆட்சியர் சங்கீதா பேசியதாவது, “டங்ஸ்டன் கனிம சுரங்கம் விவகாரம் தொடர்பாக மாநில அரசிடம் பேசியுள்ளோம். கிராம மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அறிக்கைகள் சமர்பித்தால் மட்டுமே நிறுவனத்திற்கு ஒப்புதல் வழங்கப்படும். அந்நிறுவனம் என்ஓசி (NOC) விண்ணப்பிக்கும் சமயத்தில் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு, சுற்றுச்சூழல் அனுமதி, கிராம சபை கூட்டத்தில் ஒப்புதல் உள்ளிட்ட 20 கட்டுப்பாடுகள் உள்ளன.
டங்ஸ்டன் சுரங்க திட்ட ஒப்பந்தம் குறித்து பத்திரிக்கைகள் மூலமாக மட்டும் தான் செய்திகள் தெரியவந்துள்ளது. இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் அனுமதிக்கு முதலில் விண்ணப்பம் செய்யட்டும். அதற்குள் ஏன் பயப்படுகிறீர்கள்? அதற்கு முன்னதாக எப்படி அத்திட்டத்திற்கு எதிராக அறிக்கை வெளியிட முடியும். முதலில் அவர்கள் ஒப்பந்தம் பெறட்டும், அதன் பிறகு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.
இதையும் படிங்க: முதலில் கிரானைட் தற்போது டங்ஸ்டன்; கனிமச் சுரண்டலுக்கு இலக்காகிறதா மேலூர்? கொதிக்கும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்!
குறிப்பிட்ட இடங்களில் கனிமம் எடுப்பது மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியாமல் நடந்திடுமா? என விவசாயிகள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், “இது போன்ற அனைத்து இடங்களும் சாட்டிலைட் மூலமாக கண்டுபிடிக்கப்படுகிறது. சாட்லைட் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. மாவட்ட நிர்வாகம், தோண்டி பார்த்துக் கொள்ளுங்கள் என யாருக்கும் அனுமதி வழங்குவதில்லை. மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து மாநில அரசுக்கு தெரியாது.
இது போன்ற நடவடிக்கைக்கு மத்திய அரசு மாநில அரசிடம் மட்டும் தான் அனுமதி கேட்கும், மாவட்ட நிர்வாகத்திடம் கேட்காது. இதுவரை மாநில அரசிடம் அனுமதி பெறவில்லை. இதனால், யாரும் பயப்பட வேண்டிய அவசியமில்லை. இத்திட்டம் வராமல் தடுப்பதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கும். மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், இது குறித்து கடிதம் அனுப்ப உள்ளோம்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்து பூர்வீக வைகை பாசன விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகி ஆதிமூலம் பேசியதாவது, “இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். மதுரையை பாதுகாக்கப்பட்ட பண்பாட்டு சூழியல் மண்டலமாக அறிவிக்க வேண்டும். டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமையாது என்ற உறுதிமொழியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்க வேண்டும். இது குறித்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.
அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களும், அமைச்சர்களும் இதற்கு ஒப்புதல் வழங்கப்படவில்லை. தேவைப்பட்டால் தொடர் போராட்டங்களை நடத்தவும் தயாராக உள்ளோம். அதற்கு முல்லை பெரியாறு பாசன விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கம் ஒருங்கிணைப்பு குழு உறுதுணையாக இருக்கும்,” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்