சென்னை: இந்திய சினிமாவின் மிக முக்கிய இசையமைப்பாளர்களில் ஒருவர் ஏ.ஆர்.ரஹ்மான். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிப் பாடல்களுக்கும், படங்களுக்கும் இசை அமைத்துள்ளார். இந்நிலையில், சென்னை அண்ணா சாலையில் புகழ்பெற்ற ஹஸ்ரத் சையத் மூசா காதிரி என்ற தர்கா உள்ளது.
இங்கு ஆண்டுதோறும் சந்தனக்கூடு கந்தூரி மற்றும் ஆண்டு விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த தர்காவில் நேற்று (பிப்.26) நடைபெற்ற சந்தனக்கூடு திருவிழாவில் பங்கேற்பதற்காக ஏ.ஆர்.ரஹ்மான் காரில் வந்திருந்தார். அதன் பின்னர், சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட வந்த அவரைக் காண, ஏராளமான ரசிகர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதன் காரணமாக, உடனடியாக தனது காருக்கு செல்வதற்காக ஏ.ஆர்.ரஹ்மான் அங்கிருந்து புறப்பட்ட நிலையில், அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், காருக்கு செல்ல முடியாத சூழல் உருவானது. காவல் துறையினர் எவ்வளவு முயன்றும் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
ஆகையால், தனது காரில் போக வழி இல்லாததால், அவ்வழியே வந்த ஆட்டோவில் ஏறி ஏ.ஆர்.ரஹ்மான் சென்றுவிட்டார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது, அவர் ஆட்டோவில் ஏறிச் செல்லும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: 4 ஆண்டுகளுக்கு பிறகு சாதாரண ரயில்களின் கட்டணம் குறைப்பு.. பயணிகள் உற்சாகம்..