தேனி: நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில், பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவுபெற உள்ளது. இதனை முன்னிட்டு, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் அந்தந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்களின் இறுதி கட்ட பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், தேனி மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் டிடிவி தினகரனை ஆதரித்து, அவரது மனைவி அனுராதா தினகரன், பெரியகுளம் அடுத்த லட்சுமிபுரம் பகுதியில் தனது இறுதிகட்ட பிரசாரத்தை மேற்கொண்டார்.
அப்போது திறந்த வெளி வாகனத்தில் நின்றபடி மக்களிடம் பேசிய அவர், "பூர்வ ஜென்மத்தில் செய்த புண்ணியம்தான் டிடிவி தினகரன் தற்பொழுது தேனி நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது. இது எங்களுக்கு கிடைத்த பாக்கியம். மீண்டும் சொந்தங்களுடன் இணைந்தது போல் உள்ளது.
தேனி மக்களின் வாக்குகளை 300 ரூபாய்க்கும், 500 ரூபாய்க்கும் விலைக்கு வாங்கி விடலாம் என தரம் தாழ்த்தி நினைக்கும் அரசியல் கட்சிகளுக்கு தேனி மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்" எனக் கூறினார்.
மேலும், தேனி மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் அளவிற்கு வளர்ச்சித் திட்டங்களை செய்து, அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் டிடிவி தினகரன் திட்டம் வைத்துள்ளதாகக் கூறி தனது இறுதி கட்ட பரப்புரை மேற்கொண்டார். அதன் பின்னர், அப்பகுதியில் கூடியிருந்த பெண்களிடம் நேரில் சென்று வாக்கு சேகரித்தார். தொடர்ந்து அப்பகுதியில் இருந்த கோயிலில் சாமி தரிசனம் செய்து, தனது இறுதி கட்ட தேர்தல் பிரசாரத்தை முடித்துக் கொண்டார்.
இதையும் படிங்க: "வாக்களிக்கும் உரிமையை ஒருபோதும் இழக்காதீர்கள்" - வேங்கைவயலில் சாட்டை துரைமுருகன் வேண்டுகோள்