ஈரோடு: நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகம், புதுச்சேரியில் நடக்க உள்ளது. இதையொட்டி, அரசியல் தலைவர்கள் பலரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அந்தவகையில், திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் முருகானந்தத்தை ஆதரித்து, அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கவுந்தப்பாடி பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அண்ணாமலை, "கடந்த 2014ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக 283 எம்பிகளுடனும், 2019-ல் 303 எம்பிகளுடனும் வெற்றி பெற்றது. இம்முறை 400 எம்பிக்களுக்கும் மேல் வெற்றி பெறுவதற்காக பாஜக உழைத்து வருகிறது.
திமுக ஆட்சிக்கு வந்தால் சிலிண்டருக்கு மானியம் தருவதாகவும் பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதாகவும் கூறினர். ஆனால், அதை செய்யவில்லை. ஆனால், பிரதமர் மோடி சொல்லாமலே சிலிண்டருக்கு மானியம் வழங்கியுள்ளார். மூன்று முறை பெட்ரோல் டீசல் விலையை குறைத்து வழங்கியுள்ளார்.
2019ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக அளித்த தேர்தல் அறிக்கை ஜனவரி மாதத்தில் முடிக்கப்பட்டது. பாஜகவின் தேர்தல் அறிக்கையுடன் மற்ற கட்சிகளின் அறிக்கைகளுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். திமுக பொறுத்தவரை கோபாலபுரம் வளர்ந்தால் போதும் என்று நினைக்கிறார்கள்" என விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "வலிமையான நாட்டை பிரதமர் மோடி தலைமையிலான அரசு உருவாக்கி உள்ளது. குறிப்பாக, நாட்டில் தீவிரவாதம், குண்டு வெடிப்பு, கலவரம் உள்ளிட்டவை இல்லாத வகையில் நடவடிக்கையை பாஜக அரசு எடுத்து வருகிறது. மேலும், தமிழகத்தில் பெண்கள் இரவு சுதந்திரமாக வெளியில் செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது.
பிரதமர் மோடி மட்டும் நேர்மையானவர் அல்ல, அவருடன் இருக்கும் மத்திய அமைச்சர்கள் அனைவரும் நேர்மையானவர்கள். ஒரு குண்டூசி கூட அவர்கள் திருடியதாக புகார் இல்லை. ஆனால், தமிழ்நாட்டில் ஒரு குண்டூசியையாவது விட்டுவைத்த அமைச்சர் யாரையாவது சொல்லுங்கள் பார்க்கலாம்" எனக் குற்றம்சாட்டினார்.
மேலும் பேசிய அவர், "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பிரதமர் மோடியை '29 பைசா' என்று அழைக்கின்றனர். நாம் உதயநிதியை 'கஞ்சா உதயநிதி' என்று அழைக்கலாமா? கஞ்சா விற்பனையை கிராமம்தோறும் கொண்டு சேர்த்ததுதான், திமுக அரசின் சாதனை" என கடுமையாக சாடினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலையிடம், சீமான் விவாத்திற்கு அழைத்தது குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு, "சீமான் இப்பொழுதுதான் அந்த நிலைக்கு வந்திருக்கிறாரா? சீமானை யாரும் கண்டு கொள்வதில்லை. முதல்நாள் அன்பு தம்பி என்பார், அடுத்த நாள் திட்டுவார்.
எங்களுடைய போட்டி நாம் தமிழர் கட்சியோடு இல்லை. பிறகு எதற்காக பொது விவாதம்? ஏன் அவருடன் மேடையில் பேச வேண்டும்? என் மேடையில் நான் பேசுகிறேன், அவருக்கான மேடையில் அவர் பேசட்டும். மக்கள் இரண்டு பேரையும் பார்க்கட்டும். யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்.
இதையும் படிங்க: "உதயநிதி 29 பைசா மோடி என்று கூறினால், கஞ்சா உதயநிதி என்று சொல்லுங்கள்"