கோயம்புத்தூர்: இது தொடர்பாக, தமிழ்நாடு பாஜக தலைவரும், கோவை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளருமான அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோயம்புத்தூர் மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது, சிறுவாணி மற்றும் பில்லூர் அணைத் திட்டங்கள். சிறுவாணி தண்ணீர், கோயம்புத்தூரின் குடிநீர் தேவைக்காகவும், பில்லூர் அணையிலிருந்து பெறப்படும் தண்ணீர், குடிநீர் மற்றும் பாசனத் தேவைகளுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.
சிறுவாணி அணையிலிருந்து பெறப்படும் குடிநீர், கோவையின் 7 நகராட்சிகளுக்கும், 28 ஊராட்சிகளுக்கும், கோவை மாநகராட்சியின் ஒரு பகுதிக்கும் பயன்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும், கோடை காலத்தில் இந்த அணைகளில் நீர்மட்டம் குறைவதும், அதனால் பொதுமக்கள் அவதிப்படுவதும் வாடிக்கையாகியிருக்கிறது.
இந்த ஆண்டும், சிறுவாணி மற்றும் பில்லூர் அணைகளில் நீர்மட்டம் குறைந்திருப்பதால், கோயம்புத்தூர் பகுதிகளில் கடுமையான குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. எந்தவித தொலை நோக்குச் சிந்தனையும் இல்லாத திமுக அரசு, குடிநீர்ப் பற்றாக்குறை தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளாததால், இந்த ஆண்டும் குடிநீர் பஞ்சம் தொடர்கிறது.
சிறுவாணி அணையின் மொத்த நீர்த்தேக்க உயரம் 50 அடி. நேற்றைய நிலவரப்படி, நீர்மட்டம் 18.10 அடியாக மட்டுமே உள்ளது. அதேபோல, பில்லூர் அணையின் நீர்த் தேக்க உயரம் 100 அடியாகும். நேற்றைய நிலவரப்படி, 62.5 அடி உயர நீர்மட்டமே உள்ளது. பில்லூர் 1,2,3 திட்டங்களுக்கு, தினமும் 40 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
கேரள மாநிலம் முத்திக்குளம் என்ற பகுதியில் உருவாகும் சிறுவாணி ஆறு, கூடுதுறை என்ற இடத்தில் பவானி ஆற்றில் இணைகிறது. அங்கிருந்து பவானி ஆறாக, பில்லூர் அணைக்கு வருகிறது. இங்கிருந்துதான், அத்திக்கடவு மற்றும் பவானி சாகர் அணை வரை தண்ணீர் செல்கிறது.
இந்த நிலையில், கடந்த 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், திமுகவின் கூட்டணிக் கட்சியான கேரள மாநில கம்யூனிஸ்ட் கட்சி, கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி அருகே, நெல்லிப்பதி என்ற இடத்தில் விதிகளை மீறி, சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டிய செய்தி வெளியானது.
இதையும் படிங்க: சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கேரள அரசு - கோவை விவசாயிகள் வேதனை!
சுமார் 90% தடுப்பணை பணிகள் முடிவடைந்ததும், மேலும் இரண்டு தடுப்பணைகள் கட்ட, கேரள கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்திருப்பதும் தெரிய வந்தது. சிறுவாணி ஆற்றின் குறுக்கே, கேரள கம்யூனிஸ்ட் கட்சி கட்டி வரும் தடுப்பணைகளால், கோடை காலத்தில், பில்லூர் அணைக்கு வரும் நீர்மட்டம் குறையும் என்றும், இதனால் கோயம்புத்தூர் மக்களுக்கு குடிநீர் பற்றாக்குறையும், விவசாயிகளுக்கு பாசன நீர் வரத்து குறையும் என்றும், கடந்த ஆண்டே பொதுமக்களும், விவசாயப் பெருமக்களும் அச்சம் தெரிவித்தும், தங்கள் இந்தியா கூட்டணி நலனுக்காக, இது குறித்து கேரள கம்யூனிஸ்ட் அரசிடம் எதுவும் பேசாமல், தடுப்பணைகள் கட்டும் முடிவைக் கைவிட வலியுறுத்தாமல், கோயம்புத்தூர் மக்கள் நலனுக்கு விரோதமாக திமுக அரசு செயல்பட்டதன் விளைவு, இந்த ஆண்டு கோடை காலம் வரும் முன்னரே, கோயம்புத்தூரில் குடிநீர்ப் பற்றாக்குறை நிலவுகிறது.
உடனடியாக, திமுக அரசு, கோயம்புத்தூரில் நிலவும் குடிநீர் பற்றாக்குறையைச் சரி செய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும், சிறுவாணி ஆற்றின் குறுக்கே, கேரள மாநில கம்யூனிஸ்ட் அரசு கட்டியுள்ள தடுப்பணைகளின் தற்போதைய நிலை என்ன என்பதையும் தமிழ்நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும், தங்கள் இந்தியா கூட்டணிக் கட்சி நலனுக்காக, தமிழ்நாட்டின் மக்கள் நலனை பலி கொடுக்காமல், கேரள கம்யூனிஸ்ட் அரசு, மேலும் புதிய தடுப்பணைகள் கட்டாமல் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும், தமிழ்நாடு பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இது குறித்து கடந்த ஆண்டு ஏப்ரலில் ஈடிவி பாரத் தரப்பில் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக, அப்போது நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில், இது தொடர்பாக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பேரவையில் பதிலளித்துப் பேசிய துரைமுருகன், இது தொடர்பான செய்தி வந்தவுடன் அதிகாரிகளை வைத்து ஆய்வு செய்வதாகவும், கள ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Siruvani River: ஈடிவி பாரத் செய்தி எதிரொலி.. சிறுவாணி இடையே கேரள அரசின் அணை குறித்து பேரவையில் அமைச்சர் பதில்!