கோயம்புத்தூர்: வருகிற நாடாளுமன்றத் தேர்தலில், கோவை தொகுதியில் பாஜக சார்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். இதற்கான பிரச்சாரப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், கோவை நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பல்லடம் சட்டமன்றத் தொகுதியில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, "மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக இந்த தேர்தலில் நானே களத்தில் இறக்கப்பட்டிருக்கிறேன். 400 எம்பிக்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பது எதிர்கட்சிகளை பேசவிடாமல் முடக்குவதற்கு அல்ல, இந்தியாவின் வளர்ச்சியை முன்னோக்கி கொண்டு செல்வதற்காகவே.
ஆனைமலை நல்லாறு திட்டத்தை செயல்படுத்த இங்கு தேர்ந்தெடுக்கப்படுகின்ற வேட்பாளர் குரல் கொடுக்க வேண்டும். இந்த திட்டத்தை நிறைவேற்ற 10 ஆயிரம் கோடி ரூபாய் வேண்டும். அதனை எந்த வேட்பாளரால் மத்திய அரசிடம் இருந்து பெற்றுத் தர முடியும் என்பதை சிந்தித்து பாருங்கள்.
சமீப காலமாக கோவையில் தண்ணீர் பஞ்சம் தலைதூக்கிவிட்டது. உங்கள் பிரச்னைகளை மேலே கொண்டு சென்று சரி செய்வதற்கு ஒரு நபர் தேவை. குறைந்தபட்சம் நான் சொல்லக்கூடியதை அவர்க்ள் கேட்டு, அதன் பிறகு அழுத்தம் கொடுத்து செய்ய வேண்டியதைச் செய்ய வைப்பது என் கடமை.
கரூர் - கோவை 6 வழிச்சாலை கொண்டு வர வேண்டும். கேஸ் என்பது பைப் மூலம் வீட்டிற்கு கொண்டு வரப்படும். தமிழகத்தில் பாஜக எம்.பிக்கள் இல்லாததால், வெறும் 2.4 சதவீத வீடுகள் தான் நமக்கு கிடைத்துள்ளது. நரேந்திர மோடி பாரபட்சம் பார்ப்பதில்லை. பயனாளிகளைத் தேர்ந்தெடுப்பதில் தமிழ்நாடு அரசு சுணக்கம் காட்டுகிறது. கம்யூனிஸ்ட் எம்பிக்கள் கேள்வி கேட்பதில்லை.
தற்போதுள்ள எம்.பியை யாருமே பார்த்ததில்லை. ஆனால், அண்ணாமலையை மாநிலத் தலைவராக எத்தனை பேர் பார்த்துள்ளீர்கள்? அரசியலில் நான் விடுமுறை எடுத்ததே இல்லை. என் அம்மாவை பார்த்தே 2 மாதம் ஆகிவிட்டது. நான் தெளிவாக உள்ளேன். இப்போது மாற்றம் இல்லை என்றால், எப்போதும் இல்லை.
அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பணத்தோடு களத்தில் நிற்கிறார். இது உங்களுடைய தேர்தல். 40 தொகுதியிலும் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதனால் நீங்களே அண்ணாமலையாக, மோடியாக எண்ணி பிரசாரம் செய்யுங்கள்.
இன்னும் 5 ஆண்டுகள் உங்கள் சேவகனாக பணி செய்ய, 25 நாட்கள் எங்களுக்காக நீங்கள் பணி செய்யுங்கள். தொகுதிக்கு தேவையானதை டெல்லியில் சன்டையிட்டு பெற்றுத் தருவேன். தென்னை விவசாயிகளின் கோரிக்கை மத்திய அரசுக்கு கொண்டு செல்லப்படும். வேலம்பட்டி சுங்கச்சாவடி அகற்ற நெடுஞ்சாலைத்துறை அமைச்சரிடம் முறையிடப்படும்” என பேசினார்.
இந்நிகழ்ச்சியில் கோவை மற்றும் திருப்பூர் பகுதியைச் சேர்ந்த மாற்று கட்சியினர் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை முன்னிலையில் தங்களை பாரதிய ஜனதா கட்சியில் இணைத்துக் கொண்டனர்.
இதையும் படிங்க: "தமிழகத்தில் அதிமுக என்ற கட்சி இருக்கிறதா?” - பொன்முடி கடும் விமர்சனம்! - Minister Ponmudi Criticize AIADMK