கோயம்புத்தூர்: நட்சத்திர ஹோட்டலில் தங்க ஆன்லைன் மூலமாக அறை புக் செய்துள்ளதாகவும், அதற்கு பணம் செலுத்தி இருப்பதாகவும் கூறி, போலி பில்லைக் காட்டி ஏமாற்றிய ஆந்திராவைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆந்திராவைச் சேர்ந்த சுதிர் என்பவர், கடந்த மே 5ஆம் தேதி மாலை, கோவை அவினாசி சாலையில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலுக்குச் சென்றுள்ளார். அங்கு சென்று ஹோட்டலில் தங்குவதற்காக தான் ஆன்லைன் மூலம் அறை புக் செய்து, அதற்கு பணமும் செலுத்தி இருப்பதாகக் கூறி பில்லைக் காட்டி ஹோட்டலில் தங்கியுள்ளார்.
இதையடுத்து ஹோட்டல் நிர்வாகிகள் அவருக்கு அந்த அறையை கொடுத்து தங்க அனுமதித்துள்ளனர். இந்நிலையில், நேற்று (மே 6) காலை, சுதிர் அறையை காலி செய்ய முயன்ற போது, ஹோட்டல் நிர்வாகிகள் கணக்கை சரிபார்த்துள்ளனர். அப்போது தான், சுதிர் ஹோட்டலில் தங்குவதற்காக பணம் ஏதும் செலுத்தவில்லை என்பதும், அவர் காண்பித்தது போலி பில் என்பதும்தெரிய வந்துள்ளது. இதனையடுத்து சம்பவம் குறித்து ஹோட்டல் நிர்வாகத்தினர் பந்தய சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அந்த புகாரின் பேரில் பந்தயசாலை போலீசார் சுதிரை கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர் தொடர்ந்து இதே போல பல்வேறு மாநிலங்களில், போலியான முகவரி மற்றும் தகவல்களைக் கொடுத்து, பணம் கொடுக்காமல் ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டு வந்திருப்பது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட சுதிரை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், அவரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.