வேலூர்: வேலூர் அடுத்த கொணவட்டம் பகுதியில் பாமகவினர் இல்லத் திருமணத்தில் பாமக கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக நிலைப்பாட்டை இரண்டு நாட்களில் நிர்வாக குழுக் கூட்டத்திற்குப் பிறகு தெரிவிப்போம்.
நீட் தேர்வு தேவை கிடையாது, சமூக நீதிக்கும், கிராமப்புற ஏழை மாணவர்களுக்கும் எதிரான நீட் தேர்வை இந்தியாவில் ரத்து செய்ய வேண்டும். குறைந்தது தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது தான் எங்களுடைய நோக்கம்.
பாமக கூட்டணி சேர்ந்ததற்கு நரேந்திர மோடி மூன்றாவது முறையாகப் பிரதமராக வந்துள்ளார். இந்தியாவை மூன்றாவது பொருளாதார நாடாக உலகளவில் எடுத்து செல்வார். அதே போல் மருத்துவர் ராமதாஸ் சொல்வதைப் போல் இந்தியா சார்ந்த சமூக நீதி பிரச்சனைகளை வலியுறுத்தித் தீர்வு காண்போம்.
காவிரி நீர் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம். காவிரி தமிழ்நாட்டின் உயிர் நாடி பிரச்சனை, காவிரி மூலம் 50 லட்சம் விவசாயிகள், 4 கோடி மக்கள், 22 மாவட்டங்கள் பயனடைகின்றனர். அங்கு காங்கிரஸ் ஆட்சி, இங்கு திமுக கூட்டணி ஆட்சி ஆகிய இரண்டு அரசும் தான் இதற்கு முழு தீர்வு காண வேண்டும்.
தமிழ்நாடு முதலமைச்சர் போதைப் பொருளை மும்முரமாக ஒழிப்பதாகச் சொல்கிறார், ஆனால் செயலில் ஒன்றுமில்லை. நான் முதல் சந்திப்பில் முதலமைச்சரிடம் போதைப் பொருளை ஒழிக்க வேண்டும் என்றேன். மேலும் போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பாக மாதம் தோறும் கூட்டம் நடத்த வேண்டும் என்றேன்.
ஆனால், கஞ்சா 1.0, 2.0 என சொல்லி 5 ஆயிரம் பேரை கைது செய்யப்பட்டார்கள். அவர்களும், ஜாமீனில் வெளியில் வந்துவிடுகின்றனர். மதுவை விட கஞ்சா போதைப்பொருள் பிரச்சனையால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதனைத் தடுக்க தமிழ்நாடு முதலமைச்சர் கவனம் செலுத்த வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பள்ளிக்குச் செல்ல 50 கி.மீ பயணம்: சாலை வசதி வேண்டி தமிழக அரசுக்கு மலைகிராம மக்கள் கோரிக்கை! - Peenjamandai Road Issue