ஈரோடு: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில், தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. இதனால், அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும், பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்தத்தை ஆதரித்து, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் பவானியில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டு ‘தாமரை சின்னத்தில்’ வாக்கு சேகரித்தார்.
அப்போது பேசிய அவர், “பாட்டாளி மக்கள் கட்சிக்கு, திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் துரோகம் இழைத்து விட்டது.
57 ஆண்டு காலம் தமிழகத்தை திமுக, அதிமுக சீரழித்தது போதும். இதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக நாம் கூட்டணியை உருவாக்கியுள்ளோம். இந்த தேர்தலின் வெற்றி மூலமாக வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில், தமிழ்நாட்டில் திமுக, அதிமுக இல்லாத கூட்டணி ஆட்சியை அமைப்போம்.
இட ஒதுக்கீடு, சமூக நீதி காக்க வேண்டும், சாதி வாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும், போதையை ஒழிக்க வேண்டும் மற்றும் ஆற்றை காக்க வேண்டும் என்று எத்தனை காலம் இவர்களிடம் கொஞ்ச வேண்டும். இனி நாம் ஆட்சியைப் பிடித்து, நாம் கையெழுத்து போடுவோம். தமிழகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அதிமுக பொதுச்செயலாலர் எடப்பாடி பழனிசாமி ஆண்டது போதுமானது.
நீதிமன்றம் சென்றாலும் செல்லுபடியாகது என தெரிந்து அதிமுக இட ஒதுக்கீடு கொடுத்தது. திமுக இட ஒதுக்கீடு பற்றி பேசுவதில்லை. அதிமுக, திமுகவால் தமிழ்நாட்டு மக்கள், விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், நெசவாளர்கள், மாணவர்கள், மீனவர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என யாருக்கும் எந்த நன்மையும் இல்லை. பாட்டாளி சமூகத்திற்கு இரு கட்சிகளும் துரோகம் செய்து விட்டனர். திராவிட கட்சிகள் இல்லாத புதிய தமிழகத்தை உருவாக்க வேண்டும்.
திமுக ஆட்சி மீண்டும் தொடர்ந்தால், மதுவுக்கு உங்கள் தாத்தாவை அடிமையாக்கினார்கள், பின்னர் உங்கள் அப்பாவை அடிமையாக்கினார்கள், தற்போது உங்கள் பிள்ளைகளை அடிமையாக்கி உள்ளார்கள். போதைப்பொருள் வீதி வீதியாக பள்ளி, கல்லூரிகளில் காணப்படுகிறது. இதனை தடுக்க, தாமரை சின்னத்தில் வாக்களித்து 2 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்” இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிங்க: அதிமுகவின் மீது விவசாயிகள் அதிருப்திக்கு இது தான் காரணம் - நடிகர் கார்த்திக் ஓபன் டாக்! - Actor Karthik