சென்னை: ஜெர்மன் நாட்டின் ஃபிராங்க் பார்ட் நகரில் இருந்து லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நள்ளிரவு 12 மணிக்கு சென்னைக்கு வந்துவிட்டு, மீண்டும் சென்னையில் இருந்து அதிகாலை 1.50 மணிக்கு ஃபிராங்க் பார்ட் புறப்பட்டு செல்லும். அந்த வகையில் நேற்று நள்ளிரவு 232 பயணிகளுடன் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து கொண்டு இருந்தது.
விமானம் நடுவானில் பறந்து கொண்டு இருந்தபோது, விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்த, சென்னை ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த 92 வயதான ஜெகநாதன் என்ற முதியவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து விமான பணிப்பெண்கள் அந்த முதியவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்ததோடு, விமான கேப்டனுக்கும் தகவல் தெரிவித்தனர்.
இதை அடுத்து விமான கேப்டன் சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு அவசரமாக தகவல் தெரிவித்து, விமானம் சென்னையில் தரையிறங்கியதும், முதியவருக்கு அவசர மருத்துவ சிகிச்சை வழங்குவதற்காக விமான நிலைய மருத்துவ குழுவினரை தயார் நிலையில் இருக்க ஏற்பாடு செய்யுமாறு கூறியுள்ளார்.
விமானம் நேற்று நள்ளிரவில், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வந்து தரை இறங்கியதும், உடனடியாக விமான நிலைய மருத்துவ குழுவினர், விமானத்துக்குள் வந்து, பயணி ஜெகநாதனை பரிசோதித்தனர். அவர் விமான இருக்கையில் சாய்ந்த படி இருந்தார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் அவர் கடுமையான மாரடைப்பால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
இதை அடுத்து சென்னை விமான நிலைய போலீசார் விரைந்து வந்து, ஜெகநாதன் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதியவரின் குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே விமானம் நடுவண்ணில் பறந்து கொண்டிருந்தபோது, விமானத்துக்குள் பயணி ஒருவர் உயிரிழந்ததால், அந்த விமானம் முழுமையாக சுத்தப்படுத்தப்பட்ட பின்பே, மீண்டும் விமானத்தில் பயணிகள் ஏற்றப்பட வேண்டும் என்று விமானிகள் அறிவித்து விட்டனர். இதை அடுத்து விமானம் முழுவதும் ஸ்ப்ரே அடித்து சுத்தப்படுத்தப்பட்டது.
அதன் பின்பு அந்த விமானத்தில் சென்னையில் இருந்து, ஃபிராங்க் பார்ட் செல்ல இருந்த, 196 பயணிகள் விமானத்தில் ஏற்றப்பட்டு, வழக்கமாக அதிகாலை 1.50 சென்னையில் இருந்து பிராங்க் பார்ட் புறப்பட்டு செல்ல வேண்டிய அந்த விமானம், இரண்டரை மணி நேரம் தாமதமாக, இன்று அதிகாலை 4.20 மணிக்கு புறப்பட்டு சென்றது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: சென்னை விமான நிலைய மெயின் ரன்வேயில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.. அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை என்ன? - Dubai Delayed Flight