சென்னை: பாஜக பெண் நிர்வாகியை வீடு புகுந்து தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரில் பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி, அவரது கார் ஓட்டுநர் ஸ்ரீதர் உள்ளிட்ட 4 பேர் மீது கோட்டூர்புரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம், அத்துமீறி உள்ளே புகுந்து தாக்குதல், காயப்படுத்துதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து அமர் பிரசாத் ரெட்டியை கைது செய்வதற்காகத் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் முன் ஜாமீன் கோரி அமர் பிரசாத் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து உள்ளார். அந்த மனுவில் "அரசியல் உள்நோக்கத்துடன் பழிவாங்கும் நடவடிக்கையாக தன் மீது பொய் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் தனக்கு எதிரான புகார் குறித்து முறையாக விசாரணை நடத்தாமல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மற்றொரு நபரும் முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளதாகவும், ஆனால் அது விசாரணைக்குப் பட்டியலிடப்படவில்லை எனவும் காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறினார்.
இதனையடுத்து, அந்த மனுவுடன் சேர்த்து அமர் பிரசாத் ரெட்டியின் மனுவும் விசாரிக்கப்படும் என நீதிபதி தெரிவித்தார். அவ்வாறு மனு ஒத்திவைக்கப்படுவதாக இருந்தால் அதுவரை கைது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது என காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என அமர் பிரசாத் ரெட்டி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பால் கனகராஜ் கோரிக்கை விடுத்தார்.
மேலும், இது ஒரு பொய் வழக்கு என்றும், வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் மனுதாரரால் அன்றாட பணிகளை கூட மேற்கொள்ள முடியவில்லை எனவும் தெரிவித்தார். ஆனால் இடைக்கால நிவாரணம் வழங்க மறுத்த நீதிபதி வழக்கின் விசாரணையை புதன்கிழமைக்கு (பிப். 7) ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: பூனம் பாண்டே செய்த பொய்ச் செய்தி மோசடி: 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு எச்சரிக்கை மணியா?