விருதுநகர்: அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் துவக்கி வைத்தார். அதன்படி கஞ்சநாயக்கன்பட்டியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 17 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலையரங்க கட்டிடத்தையும், சுக்கில நத்தம் கிராமத்தில் ரூ 13 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தையும் திறந்து வைத்தார்.
மேலும் ரூ 10 லட்சம் மதிப்பில் கட்டப்பட உள்ள நியாய விலை கட்டிடத்திற்கும் அமைச்சர் அடிக்கல் நாட்டினார். அதனைத் தொடர்ந்து மீனாட்சிபுரம் மற்றும் ஆமணக்கு நத்தம் கிராமத்தில் தலா ரூ 8 லட்சம் மதிப்பில் பயணிகள் நிழற்குடை கட்டுவதற்கும், ரூ 21 லட்சம் மதிப்பில் புதிதாக பைப் லைன் அமைக்கும் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார்.
இதையும் படிங்க: திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா: அமைச்சர் சேகர் பாபு கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்!
தொடர்ந்து குருந்த மடம் கிராமத்தில் ரூபாய் 20 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட மேல்நிலை நீர் தேக்கதொட்டியையும், ரூ 14 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தையும் அமைச்சர் திறந்து வைத்தார். இதனையடுத்து நிகழ்ச்சி மேடையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேசியதாவது,"உங்களுக்கும் எனக்கும் உள்ள உறவு 50 வருட உறவு. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை சிலருக்கு விடுபட்டுள்ளது. வரும் ஜனவரி மாதம் முதல் ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும்.
அதேபோல முதியோர் உதவித்தொகை விண்ணப்பித்து ஆணை பெற்றுள்ள அனைவருக்கும் விரைவில் முதியோர் உதவித்தொகை வழங்கப்படும். எனக்கு ஆயுள் உள்ளவரை உங்களுக்காக உழைத்துக் கொண்டே இருப்பேன். கடவுள் என்னை எத்தனை நாட்களுக்கு ஓட விடுகிறாரோ அத்தனை நாட்களும் உங்களுக்காக நான் ஓடிக்கொண்டே இருப்பேன்" என தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்