கரூர்: கரூர் மாவட்ட கூடைப்பந்து கிளப் சார்பில், 64-வது எல்.ஆர்.ஜி நாயுடு நினைவு ஆண்கள் கூடைப்பந்து போட்டி மற்றும் 10-வது கரூர் வைஸ்சியா வங்கி கோப்பைக்கான பெண்கள் கூடைப்பந்து போட்டி கரூர் நகர பகுதியில் அமைந்துள்ள திருவள்ளுவர் மைதானத்தில், மே 22ஆம் தேதி துவங்கி மே 27ஆம் தேதி வரை தொடர்ந்து 6 நாட்கள் நடைபெற்றது.
நாக் அவுட் முறையில் நடைபெற்ற இப்போட்டியில் 8 ஆண்கள் அணிகளில் 78 வீரர்களும், 4 பெண்கள் அணியில் 37 வீராங்கனைகளும் கலந்து கொண்டனர். கால் இறுதி, அரை இறுதி, மற்றும் இறுதிப் போட்டி என 6 நாட்கள் நடைபெற்றது. அரையிறுதி போட்டியில் புதுதில்லி வடக்கு ரயில்வே அணியும், சென்னை ஐசிஎப் அணியும் மோதின. இதில் புதுதில்லி வடக்கு ரயில்வே அணி வெற்றி பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தது.
இதையடுத்து திங்கட்கிழமையன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் லோனவ்லா இந்தியன் நேவி (Indian Navy Lonavilla) அணியும், புதுதில்லி இந்தியன் ஏர்போர்ஸ் (Indian Air Force New Delhi) அணியும் மோதின. இதில் லோனவ்லா இந்தியன் நேவி அணி 64க்கு 55 என்ற புள்ளிக்கணக்கில் போராடி, புதுதில்லி இந்தியன் ஏர்போர்ஸ் அணியை வீழ்த்தி முதலிடத்தைப் பிடித்தது.
இதேபோல, பெண்களுக்கான கரூர் வைஸ்யா வங்கி சுழற்கோப்பைக்கான இறுதிப்போட்டியில் ஹூப்ளி தென்மேற்கு ரயில்வே (South Western Railway Hubli) அணியும், மும்பை மத்திய ரயில்வே (Central Railway Mumbai) அணியும் மோதின. இதில் ஹூப்ளி தென்மேற்கு ரயில்வே அணி 61க்கு 53 என்ற பள்ளிக்கணக்கில், மும்பை மத்திய ரயில்வே அணி வென்று, பெண்கள் பிரிவில் முதல் இடத்தை பிடித்தது.
அதைத்தொடர்ந்து போட்டியில் வென்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் கரூர் கூடைப்பந்து குழு துணைத்தலைவர் சூரியநாராயணன் வரவேற்புரை ஆற்றினார். மேலும், இதில் செயலாளர் கமாலுதீன், இணைச் செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வெற்றி பெற்ற அணிகளுக்கு கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் ம.கண்ணன், கரூர் வைஸ்யா வங்கியின் தலைமை பொதுமேலாளர் சந்திரசேகரன் ஆகியோர் பரிசுகள் மற்றும் கோப்பையை வழங்கி சிறப்பித்தனர்.
இதில், ஆண்கள் பிரிவில் முதலிடம் பிடித்த லோனவ்லா இந்தியன் நேவி அணிக்கு எல்ஆர்ஜி நாயுடு நினைவு சுழற்கோப்பை மற்றும் பரிசுத்தொகை ரூ.1 லட்சமும், 2ஆம் இடம் பிடித்த இந்தியன் ஏர்போர்ஸ் அணிக்கு ரூ.80 ஆயிரம் பரிசுத்தொகை மற்றும் சுழற்கோப்பையும், 3ஆம் இடம் பிடித்த புதுதில்லி வடக்கு ரயில்வே அணிக்கு ரூ.60 ஆயிரம் பரிசுத்தொகையும், கோப்பையும், 4ஆம் பிடித்த சென்னை ஐசிஎப் அணிக்கு ரூ.50 ஆயிரம் பரிசுத்தொகை மற்றும் கோப்பையும் வழங்கப்பட்டன.
இதேபோல பெண்கள் பிரிவில் முதலிடம் பிடித்த ஹூப்ளி தென்மேற்கு ரயில்வே அணிக்கு பரிசுத்தொகை ரூ.75 ஆயிரம் மற்றும் கோப்பையும், 2ஆம் பிடித்த மும்பை சென்ட்ரல் ரயில்வே அணிக்கு பரிசுத்தொகை ரூ.40 ஆயிரம் மற்றும் கோப்பையும், 3ஆம் பிடித்த மும்பை வெஸ்டன் ரயில்வே அணிக்கு ரூ.30 ஆயிரம் மற்றும் கோப்பையும், 4ஆம் இடம் பிடித்த புதுதில்லி வடக்கு ரயில்வே அணிக்கு ரூ.20 ஆயிரம் மற்றும் கோப்பையும் வழங்கப்பட்டது.
மேலும், விறுவிறுப்பாக நடைபெற்ற கூடைப்பந்து ஆட்டத்திற்கு இடையே விட்டு விட்டுப் பெய்த மழையையும் பொருட்படுத்தாமல், கூடைப்பந்து ரசிகர்கள் போட்டியைக் கண்டு ரசித்தனர்.