மதுரை: மதுரை அழகர் கோயில் சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு ஹோட்டலில் 'தமிழகத்தில் கைம்பெண்கள் பெண்கள் மாண்பு பாதுகாப்பு சட்ட உரிமைகள் மற்றும் வாழ்வாதார உரிமைகளைத் தேடி' என்கின்ற ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது.
நாகப்பட்டினத்தை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் 'கலங்கரை' என்னும் அமைப்பின் ஆதரவோடு உருவாக்கப்பட்ட 'கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்கள் நலச்சங்கம்' சார்பில் நடத்தப்பட்ட மேற்கண்ட ஆய்வுகளின் அறிக்கை வெளியிடப்பட்டது. கடந்த ஓராண்டாக நடத்தப்பட்ட களஆய்வின் அடிப்படையில் புத்தக வடிவில் அறிக்கை வெளியிடப்பட்டது.
இந்த ஆய்வின் பொறுப்பாளர் ராஜகுமாரி அவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழகத்தில் வசிக்கும் பெரும்பாலான கைம்பெண்கள் பொருளாதார ரீதியாகவும், சமூக கலாச்சார நடைமுறைகள் வழக்கத்தின் படியும் மிகவும் பின் தள்ளப்பட்ட நிலையில் உள்ளனர். அவர்களுக்கு சொத்துரிமை மறுக்கப்படுகிறது. நிரந்தர வேலையில்லை. கடனாளியாக இருக்கின்றார்கள். கலாச்சார பாகுபாடுகள் அவர்களுடைய மாண்பைக் குறைத்து இன்னும் பின்னுக்குத் தள்ளி உள்ளது.
இச்சூழலில் தமிழக அரசு கைம்பெண்களுக்கென கொண்டு வந்திருக்கின்ற தனி வாரியத்தை நாங்கள் வரவேற்கின்றோம். அதே நேரம் கீழ்க்கண்ட சில பரிந்துரைகளை நாங்கள் முன்வைக்கின்றோம். பெண்களுக்குக் குறிப்பாக விதவைப் பெண்களைப் பாதுகாப்பதற்கும், அவர்களுடைய பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கும் தனிச் சட்டம் பெண்களுக்குத் தேவை.
பெண்கள் விதவை நிலைக்கு தள்ளப்படுவதற்கு முக்கிய காரணமாக இருக்கின்ற மதுபானம், மதுபோதை தடை செய்யப்பட வேண்டும். அரசு மதுவிற்பதை தடை செய்ய வேண்டும். பெண்களுக்கான நிரந்தர வேலை வாய்ப்புக்கு குறிப்பாக அரசுத் துறையில் பெண்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
மேலும், கடந்த 2011 ஆம் ஆண்டு சென்சஸ் கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் 38.5 லட்சம் விதவைப் பெண்கள் உள்ளனர். குறிப்பாக தற்போது உள்ள மக்கள்தொகையில் 10.7% கைம்பெண்கள் உள்ளார்கள். அவர்களின் கணவர்கள் இறப்பிற்கான காரணம் பல விதங்களில் இருக்கிறது.
அதில், முதன்மை காரணமாக இருப்பது மது போதை. 38% பெண்களுடைய கணவர் இறந்ததற்கான காரணம் மது போதை என்று கூறியிருக்கிறார்கள். நோய்கள் காரணமாக கணவர்கள் இருந்ததால் 34% பெண்கள் கைம்பெண்களாக உள்ளனர். ஆனால் அந்த வியாதிக்கும், மது போதைக்கும் தொடர்பு இருப்பதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
குறிப்பாக 21 வயதிலிருந்து 35 வயது வரை அதிகப்படியான பெண்கள் கைம்பெண்களாக இருக்கின்றார்கள். ஏறக்குறைய 57% பெண்கள் 21 வயதிலிருந்து 35 வயது வரை விதவையாக இருக்கிறார்கள். 3% பெண்கள் 20 வயதுக்கு குறைவாகவே விதவையாகி இருக்கின்றார்கள். இந்த இளம் கைம்பெண்கள் வேலூர் மாவட்டத்தில் தான் அதிகமான அளவில் இருப்பதாகத் தெரிகிறது.
அரசுக்கு எங்களுடைய முக்கிய பரிந்துரை என்னவென்றால் அதாவது மது போதையினால் அதிக பெண்கள் கணவனை இழந்தவர்களாக உள்ளதாக எங்களுடைய ஆய்வு அறிக்கை கூறுகிறது. அதன் அடிப்படையில் தமிழக அரசு தன்னுடைய மது கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். மது விற்பனையை தடை செய்ய வேண்டும்.
நாங்கள் இந்த ஆய்வறிக்கையை கிட்டத்தட்ட ஒன்பது மாதம் முதல் ஒரு வருடத்திற்குள் நிறைவேற்றி இருக்கின்றோம். இதில் நிறைய கைம்பெண்கள் பங்கேற்று இருக்கிறார்கள். இந்த அறிக்கையை தயாரிப்பதில் அதிகம் ஈடுபட்டவர்கள் பெண்களே. அனைத்து தகவல்களையும் சேகரித்தது பெண்களே.
நாங்கள் 495 நபர்களிடம் இந்த ஆய்வுகளை நடத்தினோம். தொடர்ந்து 12 தனிநபர் குறித்து தகவல்களை சேகரித்த நிலையில் 16 மாவட்டங்களில் இந்த ஆய்வுகளை நடத்தினோம். 8 மாவட்டங்களில் கைம்பெண்களுடன் குழு கலந்துரையாடல் நடத்தினோம்" என்று .
இதையும் படிங்க: இனிமே டிராஃப்பிக்ல மாட்டிக்க வேணா... ஊட்டிக்கு புதிய பாதை பணிகள் தீவிரம்! - Ooty New Road