சேலம்: எடப்பாடி பகுதியில் அமைந்துள்ள பயணியர் மாளிகையில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, “தமிழ்நாட்டில் போதைப்பொருள் விற்பனைகளை தடுத்து நிறுத்த வேண்டும் என அதிமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், ஆளும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மெத்தனமாக நடந்து கொள்கிறது. அதிமுக தலைவர்களின் படத்தை வைத்தால்தான் ஓட்டு கிடைக்கும் என எதிரணியினர் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் முயற்சி செய்வது பெருமையாக உள்ளது.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் நாடகத்தை அரங்கேற்றி மக்கள் மத்தியில் அனுதாபத்தை தேடுபவர்கள் நாங்கள் அல்ல. சட்டப்பேரவையில் மக்கள் பிரச்னைகள் குறித்து விவாதிப்பதை விட வேறு என்ன உள்ளது. ஆளும் அரசை பாராட்டுவது மட்டும் தான் அங்கு எடுபடுகிறது.
கள்ளக்குறிச்சி விவகாரத்தை சட்டசபையில் 56 விதியின் கீழ் விவாதிக்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மறுப்பது ஏன்? என கேள்வி எழுப்பினார். கள்ளக்குறிச்சி விவகாரம் அவைக்குறிப்பில் பதிவாகிவிடும் என்பதற்காக, இந்த விவகாரம் குறித்து விவாதிக்க மறுத்துவிட்டனர். ஆனால், இந்த பிரச்னையை மக்கள் மத்தியில் கொண்டு செல்லவே அதிமுக சார்பில் உண்ணாவிரதம் நடத்தப்பட்டது.
நீட் தேர்வு: நீட் தேர்வு விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது. நாடாளுமன்றத்தில் அதிமுக உறுப்பினர்களுக்கு வாய்ப்பு கிடைத்திருந்தால், காவிரி நதிநீர் பிரச்சனையை அணுகியது போன்று நீட் தேர்வு பிரச்சனையையும் அணுகியிருப்போம். நீட் தேர்வு குறித்து தமிழ்நாட்டில் பேசி என்ன பயன்? கடந்த 5 ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர்கள் என்ன செய்தார்கள்? தற்போது புதுச்சேரி உள்பட 40 திமுக கூட்டணி உறுப்பினர்கள் நாடாளுமன்றம் சென்றுள்ளனர். இவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதனையும் பொறுத்திருந்து பார்க்கலாம்” இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை புழல் சிறையில் இருந்தபடியே காசிலிங்கம் என்ற கைதி, தன் மனைவியை வீடியோ கால் மூலம் தொடர்புகொண்டு, சென்னையில் இருந்து இலங்கைக்கு 1.47கிலோ மெத்தப்பட்டமைன் போதைப்பொருள் கடத்தியுள்ளதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.
— Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK (@EPSTamilNadu) July 2, 2024
விடியா திமுக ஆட்சியில் போதைப்பொருள் புழக்கம்…
மேலும், “சென்னை புழல் சிறையில் இருந்தபடியே காசிலிங்கம் என்ற கைதி, தன் மனைவியை வீடியோ கால் மூலம் தொடர்புகொண்டு, சென்னையில் இருந்து இலங்கைக்கு 1.47 கிலோ மெத்தப்பட்டமைன் போதைப்பொருள் கடத்தியுள்ளதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன” என்று எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: "மத்திய அரசு மைனாரிட்டி அரசு அல்ல; பலமான அரசு" - தமிழிசை செளந்தரராஜன் கருத்து!