சேலம்: 2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இந்நிலையில் சேலத்தில் பெரும்பாலான வாக்கு சாவடிகளில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
இதனிடையே, சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த சிலுவம்பாளையத்தில் உள்ள ஊராட்சி தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தனது மனைவி, மகன், மருமகள் மற்றும் பேரன் ஆகியோருடன் நடந்து வந்து வாக்கு செலுத்தினார்.
தனது வாக்கை செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, "ஒவ்வொருவரும் தவறாமல் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார். அதே போல் சேலம் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான பிருந்தா தேவி, அய்யந்திருமாளிகை மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
இவர் வாக்களித்த வாக்குச் சாவடி அருகே உள்ள 13ஆம் எண் வாக்குச் சாவடியில் மிகவும் காலதாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியதாக கூறப்படுகிறது. 7 மணிக்கு தொடங்க வேண்டிய வாக்குப்பதிவு ஒரு மணி நேரம் காலதாமதம் ஆனதால் வாக்காளர்கள், கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஆனால் இது குறித்து எந்தவித ஆய்வையும் மேற்கொள்ளாமல் உடனடியாக மாவட்ட ஆட்சியர் அங்கிருந்து புறப்பட்டு சென்றதை அடுத்து, தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளுக்கும், வாக்காளர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் அந்த வாக்குச்சாவடியில் பரபரப்பான சூழல் நிலவியது.
இதையும் படிங்க: தருமபுரியில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு.. முதல் முறை வாக்காளர்கள் முதல் வேட்பாளர்கள் வரை ஆர்வத்துடன் வாக்களிப்பு..!