திண்டுக்கல்: வேடசந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பேரூர் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை மற்றும் உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி திண்டுக்கல்லில் நடைபெற்றது. இதில் 15 வார்டுக்குட்பட்ட 3,750 பேருக்கு உறுப்பினர் அட்டைகள் வழங்கப்பட்டது.
இதில் முன்னாள் அதிமுக எம்எல்ஏ டாக்டர் வி.ஆர்.பி.பரமசிவம் கலந்து கொண்டு உறுப்பினர் அட்டைகளை வழங்கினார். இதனையடுத்து நிகழ்ச்சி மேடையில் பேசிய அவர் கூறியதாவது, “இந்த நாட்டை மதவாத நாடாக மாற்றி தமிழ்நாட்டை கூறு போட்டுக் கொண்டிருக்கும் பாஜகவோடு சேர்ந்துதான் நமக்கு பதவி வேண்டும் என்றால் அப்படிப்பட்ட பதவி வேண்டாம்.
பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என்று சொன்னது அதிமுகதான். அண்ணாவை தரக்குறைவாகப் பேசிய அண்ணாமலை தான், தற்போது முன்னாள் முதலமைச்சர் என்றும் பாராமல் எடப்பாடி பழனிசாமியை கொச்சைப்படுத்தி பேசியுள்ளார்.
அண்ணாமலை என்பவர் ஒரு அரசியல் அனுபவமற்ற, அரசியலுக்கு லாயக்கு இல்லாத தலைவர் என்பதை தனது பேச்சிலேயே நிரூபித்துள்ளார். ஒரு அடிப்படை அறிவு இல்லாதவர் பேசுவதைப் போல இன்று அவர் பேசுகிறார். பாஜக கட்சியினுடைய தொண்டர்களின் உழைப்பை கவலைக்கிடம் செய்து கொண்டு, தன்னை மட்டும் வளர்த்து தான் பெயர் தெரிய வேண்டும் என்று நினைப்பவர் அவர்.
அவர் விவசாயின் மகன் என கூறிக் கொள்கிறார். அப்படியானால், 2021ஆம் ஆண்டு மோடி ஆட்சியில் இருக்கும் போது பிரதமர் மந்திரி பயிர்க் காப்பீடு திட்டத்தில் பணம் வழங்கவில்லை. அந்த ஆண்டிற்கான அத்தனை பயிர்க் காப்பீடு திட்டத்தையும் தமிழ்நாடு அரசால் கொடுக்கப்பட்டது என தெரிவித்தார்.
மேலும், மீனவர்கள் அனைவரையும் சுட்டு வீழ்த்துகிறார்கள், கைது செய்து அழைத்துச் செல்கிறார்கள். இதனைப் பற்றி கவலை கொள்வதில்லை மத்தியில் ஆளக்கூடிய பாஜக. ஆனால் கச்சத்தீவைப் பற்றி பேசிவருகிறார்கள். தமிழ்நாட்டு மக்களுக்காக நல்லது செய்ய வேண்டு என்று நினைத்தால், பிரதமர் மோடி இன்னும் நான்கு ஆண்டுகளில் கச்சத்தீவை மீட்பார் என்று அண்ணாமலை சொல்லட்டும், அவர் சொல்வதெல்லாம் கேட்டு முதலமைச்சராக ஆக்குகிறோம்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது செய்வதற்காக வரவில்லை, அரசியல் செய்வதற்காக மட்டுமே வந்துள்ளார். முன்னாள் அமைச்சர்களுக்கு எப்படி மரியாதை கொடுப்பது என்ற அடிப்படை அறிவு கூட இல்லாத அவர் எப்படி ஐபிஎஸ் ஆனார் என்று தெரியவில்லை.
பத்து ஆண்டு பச்சை இங்கில் கையெழுத்து போடும்போது 'நான் கன்னடிகா கன்னடிகா' என்று கூறிய வீடியோக்கள் இங்குதான் இருக்கிறது. இன்னும் ஐந்து ஆண்டு காலத்தில் அண்ணாமலை ஆட்டுக்குட்டி மேய்ப்பதற்காகச் சென்று விடுவார். அப்போது பாஜக நிர்கதியாக தமிழ்நாட்டில் இருக்கும் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அண்ணாமலை - ஈபிஎஸ் விமர்சனம்; மாறி மாறி தலைவர்களின் உருவபொம்மையை கொளுத்திய கட்சித் தொண்டர்கள்!