புதுக்கோட்டை: திருச்சி நாடாளுமன்ற மக்களவை தொகுதிக்கு உட்பட்ட புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் அமைக்கப்பட்டிருந்த தேர்தல் அலுவலகத்தில் புதுக்கோட்டை நகர, வார்டு செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம், அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், "தமிழகத்தில் தேர்தல் களம் அதிமுகவிற்கு சாதகமாக உள்ளது. குறிப்பாக, மக்களுக்கு திமுகவின் ஆட்சி மீதுள்ள வெறுப்பு, அதிமுகவிற்கு நம்பிக்கை அளித்துள்ளது.
அதேபோல், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திருநாவுக்கரசு உள்ளிட்ட பலருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், திருச்சி தொகுதி அதிமுக வேட்பாளர் கருப்பையா புது முகமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளார். அவர் புதுமுகமாக இருந்தாலும் இப்பகுதி மக்களுக்கு பொது முகமாக உள்ளார். அவருக்கான வெற்றி வாய்ப்பும் அதிகமாக உள்ளது" எனத் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், "புதுக்கோட்டையில் 10 ஊராட்சிகளை நகராட்சியாக மாற்ற திமுக அரசு எடுத்த முடிவு, 100 நாள் வேலை திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் கிடைக்காமல் போகும் நிலை உருவாகியுள்ளதால் இப்பகுதி மக்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர். மேலும், இலவச மடிக் கணினி, தாலிக்குத் தங்கம் உள்ளிட்ட நலத்திட்டங்களும் வழங்கப்படாததால் மக்கள் திமுக மீது அதிருப்தியில் உள்ளனர்.
பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் போது கூட மாநில உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் கட்சியாகவும், மாநில உரிமைகளை விட்டுக் கொடுக்காத கட்சியாகவும் அதிமுக இருந்துள்ளது. குறிப்பாக காவேரி பிரச்சனையில் நாடாளுமன்றத்தில் மிகப் பெரிய நெருக்கடியை வழங்கியது. அதிமுகவை பொருத்தவரை ஏற்க வேண்டியதை ஏற்போம், எதிர்க வேண்டியதை எதிர்ப்போம்.
புதுக்கோட்டையை சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த அரசியல் பிரமுகர் திருநாவுக்கரசருக்கு வேட்பாளராக வாய்ப்பு வழங்கப்படாமல் இருப்பது மாவட்டம் முழுக்க இருக்கும் மக்கள், குறிப்பாக அவருடைய சமூகம் சார்ந்த மக்கள் திமுக மீது வெறுப்பு அடைந்துள்ளனர்" எனக் கூறினார்.
அதன் பின்னர், திருச்சியில் போட்டியிடும் துரை வைகோவை திமுகவினர் அவமதித்தது குறித்து செய்தியாளர் எழுப்பினார். அதற்கு, "தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர் வைகோவின் மகனை கல்லூரியில் ராகிங் செய்வது போல, திமுக அமைச்சர்கள் நடந்து கொண்டது ஏற்புடையது அல்ல. மேலும், அது கூட்டணி தர்மத்திற்கு முற்றிலும் மாறானது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: விழித்து பார்த்தால்தான் வெளிச்சம் தெரியும்; அதிமுகவை இருண்ட கட்சி என்ற விமர்சனத்திற்கு ஈபிஎஸ் பதிலடி!