சென்னை: உலக புகையிலை எதிர்ப்பு தினம் (World No Tobacco Day) ஆண்டுதோறும் உலக சுகாதார அமைப்பால் (WHO) மே 31 அன்று கடைபிடிக்கப்படுகிறது. இதன் நோக்கம் புகையிலை பயன்பாட்டினால் ஏற்படும் தீய விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், புகைபிடிப்பதை விடுவிக்க மக்களை ஊக்குவிப்பதாகும். இதய நோய், பக்கவாதம், புற்றுநோய் மற்றும் சுவாச நோய்கள் உட்பட புகைபிடிப்பதால் ஏற்படும் உடல்நல பாதி்ப்புகள் குறித்து இந்நாளி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான கருப்பொருள் (World No Tobacco Day Theme): ஒவ்வொரு ஆண்டும் புகையிலை எதிர்ப்பு தினம் பல்வேறு கருப்பொருளின்கீழ் கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில், 2024 ஆம் ஆண்டு உலக புகையிலை எதிர்ப்பு தினத்தின் கருப்பொருள் "புகையிலை தொழில் நிறுவனங்களின் தலையீட்டிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது". இதன் பொருள் குழந்தைகளை புகையிலை தொழிலில் இருந்து விலக்கி புகையிலையிலிருந்து பாதுகாப்பதாகும்.
இந்த கருப்பொருளைப் பின்பற்றுவதன் மூலமாக, சிறு குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் புகையிலைக்கு அடிமையாவதைத் தடுக்க முடியும்.
இந்த நிலையில், புகையிலை எதிர்ப்பு தினம் குறித்த விழிப்புணர்வு, சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை (Adyar Cancer Institute) சார்பில், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடத்தப்பட்டது.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் உதவிப் பேராசிரியர் சுந்திரமூர்த்தி, "உலக புகையிலை எதிர்ப்பு தினம் மே 31ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அந்த நாளில் ஒவ்வொரு ஆண்டும் அடையாறு புற்றுநோய் மருத்துவமனை சார்பில் பொதுமக்களிடத்தில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்தாண்டு உலக புகையிலை எதிர்ப்பு தின கருப்பொருள், "புகையிலை தொழில் நிறுவனங்களின் தலையீட்டிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது” என்பதாகும். 13 முதல் 15 வயதுடைய 37 மில்லியன் சிறார்கள் புகையிலையால் அதிக அளவில் பாதிக்கப்படுவதாக உலக சுகாதார அமைப்பு அச்சம் தெரிவித்துள்ளது.
புகையிலை உண்பதால் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர். பள்ளி, கல்லூரி அருகில் மறைமுகமாக விற்கப்படும் போதை பொருட்களின் விற்பனையை தடை செய்ய தமிழக அரசு கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க: குழந்தை பாலினம் விவகாரம்; இர்பானின் விளக்கம் ஏற்பு - சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்! - Irfan Gender Reveal Issue