சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்த வழக்கறிஞர் கௌதம் என்பவர், நேற்று முன்தினம் (ஜூன் 11) மர்ம கும்பலால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் குறித்து திருவான்மியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், வழக்கறிஞரைக் கொலை செய்த கும்பலை கைது செய்ய வலியுறுத்தி உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் மோகன கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய மோகன கிருஷ்ணன், வழக்கறிஞர்களுக்கு போதுமான பாதுகாப்பு இல்லை என குற்றம் சாட்டினார். இதேபோல், வழக்கறிஞர் கவுதம் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, சைதாப்பேட்டை நீதிமன்ற வழக்கறிஞர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருவதாகக் கூறி, அவற்றை தடுத்து நிறுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். முன்னதாக, கடந்த செவ்வாய் அன்று திருவள்ளூர் சாலையில் சென்று கொண்டிருந்த வழக்கறிஞரை வழிமறித்த ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல், சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடினர்.
பின்னர், படுகாயமடைந்த வழக்கறிஞர் கௌதமை அப்பகுதியில் இருந்த மக்கள் மீட்டு, அடையாறில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதனிடையே சிக்கைக்கான கட்டணம் செலுத்தினால் தான் உடலை தருவதாக, தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதனை அடுத்து, வழக்கறிஞர் கௌதமனின் உறவினர்கள் மற்றும் அவருடன் பணியாற்றும் சக வழக்கறிஞர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. அதன் பின்னர், மருத்துவமனை நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி 30 ஆயிரம் ரூபாய் செலுத்திய பின்பு கௌதமின் உடல் ஒப்படைக்கப்பட்டது.
பின்னர், திருவான்மியூர் போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே, வழக்கறிஞர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனக் கூறி, வழக்கறிஞர்கள் காவல்துறை தலைவர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றது அப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: தனக்கு கொலை மிரட்டல் விடுத்த சிறுவர்களை எச்சரித்து அனுப்பிய திருச்சி எஸ்.பி.. நடந்தது என்ன?