தேனி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தேனி பங்களாமேடு பகுதியில் தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், பெண்கள் என சுமார் 300க்கும் மேற்பட்டோர் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இதில் திமுக அரசின் அலட்சியத்தால்தான் தமிழகத்தில் கள்ளச்சாராய விற்பனை தலைவிரித்து ஆடுவதாக கூறி தமிழக அரசை கண்டித்தும், முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பதவியில் இருந்து விலக வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் ஆர்ப்பாட்டம் முடிந்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலைந்து சென்ற நிலையில், திடீரென ஒலிபெருக்கி மூலம் அதிமுக கட்சியின் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன. அப்போது பெண் ஒருவர் அதிமுக கண்டன கோஷங்கள் அடங்கிய பதாகையை கையில் வைத்தவாறு பாடலுக்கு நடனமாட தொடங்கினார்.
அந்த ஒலிபெருக்கியில் ஒலிபரப்பு செய்யப்பட்ட பாடல்களுக்கு ஏற்றவாறு ஆக்ரோஷமாகவும், சாலையில் உருண்டு புரண்டும் அப்பெண் ஆடிய நடனத்தை சாலையில் பயணித்தவர்கள் பார்த்துக்கொண்டே சென்றனர். இதனையடுத்து பெண் போலீசார் அந்த பெண்ணை அங்கிருந்து அழைத்துச் சென்றனர். அப்பெண் நடனமாடிய காட்சிகள் அடங்கிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க:கள்ளச்சாராய விவகாரம்; ஆளுநர் ரவியை சந்தித்து புகார் மனு அளித்த அண்ணாமலை