திருவண்ணாமலை: திருவண்ணாமலை நகராட்சியை மாநகராட்சியாக மாற்றுவதற்கான செயலில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. தற்போது இதுதொடர்பாக திருவண்ணாமலை கிரிவலப்பாதை அருகே உள்ள அடிஅண்ணாமலை ஊராட்சியில், கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், திருவண்ணாமலை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தினால், அடிஅண்ணாமலை ஊராட்சி உட்பட மொத்தம் 19 கிராம ஊராட்சிகளில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தின் கீழ் உள்ள 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டம் பாதிக்கப்படும். மேலும் அத்திட்டத்தில், பயன்பெறும் பணியாளர்கள் பெரிதளவில் பாதிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.
மேலும் அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் வாழ்வாதாரத்திற்கு எந்த முன்னேற்றமும் இல்லாமல், 19 ஊராட்சிகளை நகராட்சியோடு இணைத்து மாநகராட்சியாக தரம் உயர்த்தும் போது மாநில அரசும், அரசியல்வாதிகளும் மட்டுமே பயன்பெறுவார்கள் எனவும், ஏழை எளிய மக்களுக்கு வீட்டு வரி உயர்வு, குடிநீர் வரி உயர்வு உள்ளிட்ட பல இன்னல்களுக்கு ஆளாகக் கூடிய நிலை ஏற்படும் எனவும் கூறுகின்றனர்.
ஆகையால், அடிஅண்ணாமலை ஊராட்சியை திருவண்ணாமலை நகராட்சியோடு இணைத்து மாநகராட்சியாக தரம் உயர்த்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் கிராம சபை கூட்டத்தில் முக்கிய 3 தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளனர்.
அதாவது, அடிஅண்ணாமலை ஊராட்சியை திருவண்ணாமலை நகராட்சியோடு இணைத்து மாநகராட்சியாக தரம் உயர்த்தினால், குறிப்பாக 100 நாள் வேலை இழக்கும் தொழிலாளர்களுக்கு சிறு மற்றும் குறு தொழில் தொடங்குவதற்கு வழிவகை செய்ய வேண்டும். தங்களை, தற்போதைய ஊராட்சி பகுதிகளில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ளும் பணிகளுக்கு பணியமர்த்த வேண்டும்.
மேலும் கிராம சபை கூட்டம் நடத்துவதற்கு பதில் ஏரியா சபை கூட்டம் நடத்த வேண்டும். அதில், பொதுமக்கள் தங்களுடைய குறைகளை இணையதளம் மூலம் தெரிவிக்க, தொலைபேசியுடன் கூடிய இணையதள சேவையை உருவாக்க வேண்டும் ஆகிய 3 தீர்மானங்களை அடிஅண்ணாமலை ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் நிறைவேற்றினர்.
மாநகராட்சியாக மாற்றியே தீருவோம் என முயற்சி செய்யும் அரசாங்கம், மேற்கூறிய கோரிக்கைகளை நிறைவேற்றிய பிறகு தங்கள் கிராமத்தை திருவண்ணாமலை நகராட்சியோடு இணைத்து மாநகராட்சியாக தரம் உயர்த்திக் கொள்ளலாம் என கிராம சபை கூட்டத்தில் தங்களது இறுதி முடிவுகளை தெரிவித்துள்ளனர்.