மதுரை : வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், மதுரையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று பிற்பகல் தூறலாக தொடங்கிய மழை விடாமல் இரவு வரை பெய்தது. இரவு 10 மணிக்கு மேல் மதுரை மாநகர் மட்டுமன்றி, மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடும் மழைப்பொழிவு இருந்தது. இதனால் மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது.
சுமார் 3 மணிநேரத்திற்கும் மேலாக கொட்டித் தீர்த்த கனமழையால் பல வாகனங்கள் நீரில் மூழ்கின. மேலும், மணிநகரம் ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய தண்ணீரில் காவல்துறை வாகனம் ஒன்றும் காரும் சிக்கிக் கொண்டது. இந்த காரில் கோச்சடை பகுதியை சேர்ந்த கோபி, ரமேஷ் ஆகியோர் சிக்கிக்கொண்டனர். இவர்களை காவலர் தங்கமுத்து மற்றும் மணிநகரத்தை சேர்ந்த கார்த்தி, சந்திரசேகர் ஆகியோர் போராடி மீட்டனர். சுமார் 6 மணிநேரம் சுரங்கப்பாதையில் வெள்ளநீர் தேங்கி இருந்தது.
இதையும் படிங்க : மதுரையில் வெளுத்து வாங்கிய கனமழை; சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ள நீரில் மூழ்கிய வாகனங்கள்!
இதனை தொடர்ந்து காவலர் தங்கமுத்து, மனிநகரத்தை சேர்ந்த கார்த்தி மற்றும் சந்திர சேகரின் நற்செயலை பாராட்டி, தமிழ்நாடு காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் கூடுதல் இயக்குநர் டேவிட்சன் தேவ ஆசீர்வாதம் அவர்களுக்கு பரிசுகள் வழங்கி வெகுவாக பாராட்டினார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்